கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் இராணுவத்தினரால் உணவகம் அமைக்கப்படுமா.....! (Photo)
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் இராணுவத்தினரால் உணவகம் எதுவும் அமைக்கப்படமாட்டாது என மாவட்ட பொது வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடலின் போது குறித்த விடயம் தொடர்பில் நேற்று (24.10.2022) எமது பிராந்திய செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வெளியிடங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் தாதியர்களுக்கு சிறந்த உணவு வழங்கும் வகையில் இராணுவத்தினர் நடத்தும் உணவுச்சாலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்புக்களாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசேல குணரத்னவின் வடக்கு விஜயம்
அண்மையில் மத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கலாநிதி அசேல குணரத்ன வடக்கிற்கு விஜயம் செய்த போது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் தனது கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு பணிபுரியும் பெரும்பாலான வைத்தியர்கள் தமக்கு தரமான உணவு கிடைப்பதில்லை என முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலை வளாகத்தில் இராணுவ நலன்புரி உணவு நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரால் அமைக்கப்படும் உணவகம்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்கனவே நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் சிற்றுண்டிச்சாலையும், விவசாயத் திணைக்களத்தின் அம்மாச்சி உணவகமும் இயங்கி வருகின்றன.
இதற்கும் மேலாக ஏன் இராணுவத்தினரின் உணவகம் என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலை வளாகத்தில் உணவகத்தை அமைப்பதற்கான அனுமதிகளை சுகாதாரத் துறையின் உயரதிகாரிகள் இராணுவத்தினருக்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் வைத்தியசாலை பதில் பணிப்பாாளர் அவர்களை தொடர்புக்கொண்டு கேட்ட போது மேற்படி வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் தங்களுக்கு உணவு பிரச்சினை இருப்பதாக வைத்தியசாலைக்கு மத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஜயம் செய்த போது குறிப்பிட்டிருந்தனர்.
அதற்கு உதவ முடியுமா என்று பணிப்பாளர் நாயகத்தினால் இராணுவ அதிகாரியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதே தவிர வைத்தியசாலை வளாகத்தில் இராணுவத்தினரால் உணவகம் எதுவும் அமைக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
