வடக்கில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாகச் செயற்படும் இராணுவத்தினர் - பொலிஸார்
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றார்கள் - என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், வடக்கு, கிழக்கின் கல்வி நிலை மற்றும் போதைப்பொருள் மாபியாக்கள் பற்றி கருத்துக்களை வெளியிட்டார்.
போதைப்பொருள்கள் விற்பனை
இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி,

"வடக்கில் கடந்த ஏழு மாதங்களாக கல்வி நிலை மேம்பட்டுள்ளது எனச் சொன்னீர்கள். இதனை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துங்கள். வடக்கில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றார்கள்.
எனவே, வடக்கிலிருந்து இராணுவத்தினர் எப்போது வெளியேற்றப்படுவார்கள்?" - என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், "போதைப்பொருளுக்கு பின்னால் இராணுவமும் பொலிஸும் உள்ளது எனக் குற்றஞ்சாட்டினீர்கள். அதில் உண்மை உள்ளது.
ஆனால், இராணுவத்தினரும் பொலிஸாரும் வேறாக இல்லை. அங்குள்ள மாபியாக்களுடன் அவர்கள் இணைந்துள்ளனர். அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர்.
அவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்." என்றார்.
தமிழ் அரசியல்வாதிகள்
ஆனால், வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம் குறித்து அமைச்சர் சந்திரசேகர் நேரடிப் பதிலை வழங்கவில்லை. வடக்கில் இராணுவத்தினர், பொலிஸார் போதைப்பொருள் விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை அமைச்சர் சந்திரசேகர் ஒப்புக்கொண்டதை வரவேற்கின்றேன் என்று கஜேந்திரகுமார் எம்.பி. இதன்போது குறிப்பிட்டார்.
இராணுவத்தைப் பொறுப்புக்கூற வைக்காமல், மாபியாக்களை ஒழிக்க முடியாது என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், "ஒட்டுமொத்த இராணுவத்தினர் மற்றும் ஒட்டுமொத்த பொலிஸார் மீது நான் பழிசுமத்தவில்லை. ஓரிருவரைப் பற்றித்தான் குறிப்பிடுகின்றேன்.
மாபியாக்களின் பின்னால் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri