மத்திய ஹைய்ட்டியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 கைதிகளை திறந்து விட்ட ஆயுதக்குழுவினர்
மத்திய ஹைய்ட்டியில் உள்ள மிரேபலைஸ் நகரத்தை முற்றுகையிட்ட ஆயுதம் தரித்த குழுவினர், சிறை ஒன்றில் இருந்து சுமார் 500 கைதிகளை திறந்து விட்டனர்.
இதனையடுத்து, குறித்த நகரத்துக்கு மேலதிக படையதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஹைய்ட்டியின் தேசிய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மிரேபலைஸின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றிவிட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் பலர் இன்னும் தெருக்களில் சுற்றித் திரிவதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதமேந்திய குழுவினர் கிட்டத்தட்ட முழு தலைநகரையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
கனரக ஆயுதமேந்திய இந்த குழுவினர் கட்டிடங்கள் மற்றும் வழியில் செல்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை தீக்கிரையாக்கியதாகவும், குடியிருப்பாளர்கள் தங்கள் உயிருக்காக தப்பி ஓடியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
அவர்கள் உள்ளூர் பொலிஸ் நிலையத்தையும் தாக்கிய பின்னர் சிறைச்சாலைக்குள் புகுந்தனர், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 பேரை அவர்கள் திறந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டு ஹைய்ட்டியில் குழு வன்முறையின் விளைவாக மொத்தம் 5,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2024 ஆம் ஆண்டில் மேலும் 2,212 பேர் காயமடைந்தனர் மற்றும் 1,494 பேர் கடத்தப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
