டி20 என்பது ஃபாஸ்ட் ஃபுட் போன்றது..! அர்ஜூன கண்டனம்
கிரிக்கெட்டின் தற்போதைய நிலை மற்றும் நவீன கிரிக்கெட் கலாசாரம் குறித்து காட்டமான விமர்சனங்களை இலங்கை அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்க முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, டி20 கிரிக்கெட்டின் தாக்கம் மற்றும் உள்நாட்டு நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைத்துள்ளார்.
பிரபல முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் போன்றவர்கள் டி20 போட்டிகளை ஒரு முழுமையான கிரிக்கெட் விளையாட்டாகக் கருத வேண்டாம் என்றும், அதற்கு வேறு பெயரிட வேண்டும் என்றும் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கெட்டைத் திருத்தவே முடியாது..
டி20 கிரிக்கெட் என்பது ஃபாஸ்ட் ஃபுட்' (Fast Food) உணவைப் போன்றது. சுவையாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும், ஆனால் ஆரோக்கியமானது அல்ல என தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது 'அம்மா வீட்டில் அன்பாக சமைத்து ஊட்டும் உணவைப் போன்றது'. அது ஆரோக்கியமானது மற்றும் அதில் பல நன்மைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டால் மட்டுமே ஒரு வீரரால் அனைத்து வடிவங்களிலும் ஜொலிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த டி சில்வா, மார்வன் அத்தப்பத்து, ரோய் டயஸ், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்ற ஜாம்பவான்களின் ஆட்ட நுணுக்கங்களை இன்றைய தலைமுறையினர் பழைய பதிவுகள் மூலம் மீளப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டைச் சீரமைக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு "பொய் நாடகம்" என விமர்சித்துள்ளார். முத்தையா முரளிதரன் ஒருமுறை கூறியது போல, இந்த கிரிக்கெட்டைத் திருத்தவே முடியாது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது இயங்கி வரும் 'மறுசீரமைப்பு குழு' மற்றும் 'இடைக்கால நிர்வாக சபை' போன்றவை உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனவும், 1996 உலகக் கிண்ண வெற்றியில் இருந்து 30 ஆண்டுகள் கடந்தும் கிரிக்கெட் வளர்ச்சி அடையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சிறந்த பயிற்சியாளர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், எதற்கும் உதவாத வெளிநாட்டு நபர்களைப் பெருந்தொகை பணம் கொடுத்து நாட்டுக்கு அழைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரவிந்த, மஹேல, சங்கக்கார போன்ற ஜாம்பவான்கள் இலங்கை கிரிக்கெட்டுடன் நேரடியாகத் தொடர்புபடாமல் வெளிநாடுகளுடன்இணைந்து பணியாற்றுகின்றனர். அதிக பணம் கொடுத்து அழைத்து வரப்படும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களால் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சவால் விடுக்க முடியாத அளவிற்கே இலங்கை கிரிக்கெட் உருவாக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்கள் ஜிம்முக்குச் செல்வதிலும் உடல் தகுதியைப் பேணுவதிலும் அதிக அக்கறை காட்டினாலும், அவர்களால் மைதானத்தில் கிரிக்கெட்டைச் சரியாக விளையாட முடிவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக வீரர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளாவிட்டால், டி20 போட்டிகளுக்கு அப்பால் அவர்களால் ஒரு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியாது என்பதே கசப்பான உண்மையாகும் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.