அர்ஜூன் மகேந்திரனுக்கு மீண்டும் அழைப்பாணை உத்தரவு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, நீதிமன்றினால் மீண்டும் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனது மருமகனின் நிறுவனத்துக்கு மத்திய வங்கியின் பிணைமுறி பத்திரங்களை வழங்கி, அரசாங்கத்துக்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அழைப்பாணை
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் மற்றும் இலஞ்சச் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்த பின்னர், குறித்த அழைப்பாணை உத்தரவினை ஆங்கில மொழியில் வெளியிடவும் நீதவான் உத்தரவிட்டார்.
சிங்கப்பூரில் வசிப்பதாகக் கூறப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு 2024 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஏற்கனவே அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
எனினும், அந்த அழைப்பாணையின் பிரகாரம் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என லஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு மேலதிக அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, மீண்டும் அழைப்பாணை உத்தரவு வெளியிடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




