ஆனைக்கோட்டையில் 40 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி
ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி மையத்தினை பேராதனை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் வரலாற்றுத்துறை, விரிவுரையாளர்கள், மாணவர்கள் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, இந்த ஆய்வு 40 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கபட்டதன் நோக்கம் அதன் மேன்மை, தற்போது வரை அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் என்பன பற்றி பேராசிரியர் ப.புஸ்பரட்ணத்திடம் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா 1980 அகழ்வாய்வு மகத்துவம் மற்றும் தொன்மை பற்றி மாணவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்.
ஆனைக்கோட்டை அகழ்வாய்வு
மேலும், மாணவர்களுக்கு யாழ்ப்பாண தொல்லியல் திணைக்கள அகழ்வாய்வுப் பொறுப்பதிகாரி வி.மணிமாறன் அகழ்வாய்வில் பின்பற்றப்படும் நெறிமுறை மற்றும் இடத்தேர்வு, கலாச்சார மண்படை அடுக்குகள், அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் என்பன பற்றி விளங்கப்படுத்தியுள்ளார்.
ஆனைக்கோட்டை வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய பெருங்கற்கால மையமாகும் என்பதுடன் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஊராகும்.
1980ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர்களான பொ.இரகுபதி மற்றும் கா.இந்திரபாலா, சி.க.சிற்றம்பலம் ஆகியோர் முன்னெடுத்த தொல்பொருள் அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய பெருங்கற்கால பண்பாட்டுமையம் என உறுதிப்படுத்தும் வகையில் அடையாளப்படுத்தப்பட்ட தொல்பொருட் சான்றுகள் ஏறாளமாக கிடைக்கப்பெற்ற ஆனைக்கோட்டை அகழ்வாய்வு மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் ஜுன் 20ஆம் திகதி அன்று ஆரம்பமாகியது.
நாவாந்துறைப் பகுதியைச் சீர்செய்வதற்காக கரையாம்பிட்டி மண்மேடு வெட்டப்பட்ட பொழுது அங்கு காணப்பட்ட பண்பாட்டு எச்சங்களை மையமாக கொண்டு 1980ஆம் ஆண்டில் பேராசிரியர்களான கா.இந்திரபாலா, பொ.இரகுபதி ஆகியோர் தலைமையில் அகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இவ்வகழ்வில் இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு மையங்களும் இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அகழ்வின் போது இரு இடங்களில் பெருங்கற்கால மக்களது ஈமசின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரு ஈம சின்னமையங்களும் பத்து அடி இடைவெளியில் நான்கு அடி உயரம் கொண்ட மண்மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஈமசின்னமையங்களில் 5 அடி உயரமுடைய இரு மனித எலும்புக் கூடுகள் கிழக்கு மேற்கு திசையை நோக்கிய வண்ணமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் இரு கைகளும் கட்டப்பட்ட எலும்புக்கூட்டைச் சுற்றிவைக்கப்பட்ட மட்பாண்டங்களில் கருப்பு சிவப்பு , தனி கறுப்பு சிவப்பு நிறகிண்ணங்கள் வட்டில்கள் , பானைகள் என்பன குறிப்பிடத்தக்கவை.
சில மட்பாண்டங்களில் சுறா மீன், மிருக எலும்புகள், நண்டின் ஓடுகள் என்பவற்றுடன் சிற்பி , சங்கு போன்ற பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
இப்பண்பாடு இங்கு இரும்பின் பயன்பாடு புழக்கத்தில் வந்தமை உறுதிப்படுத்த இரும்புக் கருவிகளும் ,கழிவிரும்புகளும் கிடைத்துள்ளன.
இதேவேளை, சிற்பி, சங்கு, சுறா மீன் எலும்புகள் இலங்கைப்பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஆனைக்கோட்டையில் பிராமிய எழுத்து பொறித்த மட்பாண்டம் லட்சுமி நாணயம் உரோம மட்பாண்டம் என்பவற்றை ஆதாரமாக கொண்டு இரு ஈமசின்னங்களும் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்களுக்குரியது என உறுதிபடுத்த முடிகின்றது.
எலும்புக்கூட்டின் தலை மாட்டின் அருகில் கிடைக்கப்பெற்ற கோவேத முத்திரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இதன் காலம் கி.மு 3 நூற்றாண்டு 1.7 , 1.5 cm நீள அகலம் உடையது.இதன் மேல் வரிசையில் 3 குறியீடுகளும் கீழ் வரிசையில் 3 பிராமிய எழுத்துக்களும் உள்ளன. இது மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்டுகின்றது.
இகோவேத முத்திரை பற்றி பொ.இரகுபதி (1987), இந்திரபாலா (1981), ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் (2023)ஆகியோர் ஆதாரபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |