இரு வாரத்திற்கு மாத்திரமே எம்பி பதவி! சபையில் அர்ச்சுனா வெளியிட்ட தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியேறிவிடக்கூடும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “நான் இன்னும் அதிக காலம் இந்த நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன்.
நான் உங்களை நீண்ட காலத்திற்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இங்கு இருப்பேன்” என்று கூறினார்.
மாவட்ட ஒருங்கமைப்புக் குழு (DCC) கூட்டத்தின் போது பொதுமக்களின் கவலைகளை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.
DCC கூட்ட சலசலப்பு
மேலும், வடக்கில் முன்வைக்கப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகளையும் ஆவண ஆதாரங்களையும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணைக்குழுவிடமும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் சமர்ப்பித்ததாகவும், ஆனால் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன், யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இப்பிரச்சினையை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்கக் கோரும் சட்ட நடவடிக்கையானது, வடக்கிலிருந்து வரும் சுயேட்சைப் பிரதிநிதிகள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை சில தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்று அர்ச்சுனா மேலும் கூறினார்.
மேலும், இந்தக் கவலைகளைக் களைந்து, சுயேட்சைப் பிரதிநிதிகளுக்குச் சமமான உரிமைகளை உறுதி செய்யுமாறு அவர் அரசை வலியுறுத்தினார்.