தொல்பொருள் சட்டத்தினை சவாலுக்கு உட்படுத்த முடியாத நிலை உள்ளது! சட்டத்தரணி நிதான்சன்
பயங்கரவாத தடைச் சட்டம் போன்று தொல்பொருள் சட்டத்தினையும் சவாலுக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சட்டத்தரணி நிதான்சன் தெரிவித்துள்ளார்.
தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரவு வேளையில் மூவர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டம் மக்களுக்கு மத்தியில் இருக்கின்ற பொழுது எங்களால் தமிழ் மக்கள் என்கின்ற சிறுபான்மை என்கின்ற நிலையில் சவால் உட்படுத்த முடியாதோ, அதைபோன்று கொடூரமாக இருக்கின்ற இந்த தொல்பொருள் சட்டத்தினையும் சவாலுக்கு உட்படுத்த முடியாத நிலையில் நீதிமன்றத்தில் நாடி எங்கள் சார்பில் வாதங்களை நாங்கள் முன்வைப்போம்.
மக்களின் அபிலாசை
இந்த பிரதிவாதிகளாக சொல்லப்பட்டிருக்கின்ற நபர்களுக்கு ஆதரவாக எனது கட்சியின் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக நிச்சயமாக நாம் வாதத்தினை நீதிமன்றத்தில் முன் வைப்போம்.

ஒரு விளம்பர பதாகை ஏதேனும் வெளியிலே, அல்லது பாதையிலே நீட்டப்பட்டிருக்கின்ற பதாகை இருந்தாலும் அந்த பதாகைகள் தொடர்பிலே உள்ளுராட்சி சபைகளுக்கு அதனை நீக்குவதா அனுமதி அளிப்பதா என்பதற்குரிய அதிகாரம் இருக்கின்றதுஎன உள்ளுராட்சி சட்டத்திலேயே 1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரிவு 21 இல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அது இலங்கையினுடைய தொல்லியல் திணைக்களமாக இருந்தாலும் அவர்கள் இந்த பிரதேசத்திலே வந்து சட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையிலே உள்ளூராட்சி சபையின் அனுமதி பெற்று அவர்களுடைய சட்டரீதியான பலகையையோ குறியீடுகளையோ நிறுவுவதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.
கைதுகள்
ஆனாலும் தற்போது சட்டரீதி அற்ற முறையிலே ஒரு கைதுகள் செய்து சட்டத்துக்கு உட்படாத நபர்களை கைது செய்து அரசாங்கத்தை திருப்தி படுத்துவதற்காக பொலிசார் எடுத்திருக்கின்ற நடவடிக்கை எதிராக நாம் எமது கட்சியின் சார்பிலே கட்சியின் பிரதிநிதிகளும் அதன் சட்டத்தரணிகளும் பிரதிவாதிகள் சார்பிலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி எங்களுடைய வாத பிரதிவாதங்களை முன்வைக்கவுள்ளோம்.

அத்தோடு, அநீதி இழைக்கப்படுகின்ற தமிழ் பிரதேசத்தில் தொல்லியல் என்கின்ற பெயரில் தமிழர்களுடைய காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக சூறையாடப்படுவதற்கு எதிராக நிச்சியமாக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணி நிதான்சன் தெரிவித்தார்.

