சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய ரவிகரன்
பட்டப்படிப்பையும் உள்ளகப் பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2009, 2010, 2011ஆகிய கல்வியாண்டுகளில் ஆயுர்வேத, சித்த மற்றும், யுனானி ஆகிய சுதேச மருத்துவத்துறைகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள் 304 பேரை ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி நியமனம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
அதேவேளை தற்போது நாட்டிலுள்ள சுதேச வைத்தியசாலைக் கட்டமைப்பிலே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஆளணியைவிடவும் அதிகமான அளவில், சுதேச பட்டதாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியநிலையில் சுகாதார அமைச்சரால் மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது.
மருத்துவ சேவை
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மேலைத்தேய மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி, சுதேச மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி எமது வன்னி மாவட்டத்திற்கான மருத்துவ சேவை வழங்கலை, சமச்சீராக அணுகுங்கள் என்பதே எம் கோரிக்கை. சுதேச மருத்துவ துறையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு காணப்பட வேண்டிய 14 சமூக நல மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார்.

13 பணி வெற்றிடங்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் ஒரேயொரு சமூக நல மருத்துவரைக் கொண்டு எவ்வாறு வினைத்திறனான சேவை வழங்கலை மேற்கொள்ள முடியும்? இது எத்தகைய சமச்சீரற்ற நிலை! முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 64. தற்போது இங்கு 40 பணி வெற்றிடங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன! 2025இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான மட்டுப்பாடு குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே. சுதேச மருத்துவத் துறையில் மருத்துவர் வெற்றிடங்களுடன் மருத்துவமனைச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களும் உள்ளன.
ஆளணி வெற்றிடங்கள்
வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன. மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதலும் இன்றியமையாதது. எனது முதலாவது கேள்வி! இதுவரை ஆயுர்வேத, சித்த, யுனானி பட்டக்கற்கைநெறிகளைக் கற்று, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து பணிநியமனங்களுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.
தற்போது பல்கலைக்கழங்களில் மேற்படி கற்கைநெறிகளை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கற்று வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தரும் என்றே நம்பி கற்கின்றார்கள். மேற்படியாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்டுள்ள இப்பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உறுதி மொழி என்ன?

படியுங்கள் - அரசிடம் வேலை வாய்ப்பை கோரவேண்டாம் என்பதா? படித்து நீங்களாக தனியார் மருத்துவ சேவை நிலையங்களை நடாத்துங்கள் என்பதா? அல்லது ஒவ்வோர் ஆண்டும் இத்தனை எண்ணிக்கையிலான அரச பணி வெற்றிட வாய்ப்பு தான் வழங்கப்படும் என்பதா? ஏனெனில், இது தொடர்பில் ஒரு தெளிவான அறிவித்தலை அரசு இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை என்றே எண்ணுகிறேன் - என்றார்.
நளிந்த ஜயதிஸ்ஸவின் பதில்
இந்நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதற்குப் பதிலளிக்கையில், கடந்த 2025.06.30ஆம் திகதிய நிலவரப்படி இலங்கையின் சுதேச மருத்துவ சேவையில், குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, சித்தம் மூன்று மருத்துவத்துறைகளுக்குமாக 2567 அனுமதிக்கப்பட்ட சுதேச மருத்துவர் ஆளணிகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது 2065 சுதேச மருத்துவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 502 சுதேசமருத்துவர்களின் வெற்றிடங்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இலங்கை சுதேச மருத்துவசேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முகாமைத்துவசேவைகள் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது நாட்டில் காணப்படும் 502 சுதேச மருத்துவர் வெற்றிடங்களில், 304 ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான அமச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்த 304 சுதேச மருத்துவர் பதவி வெற்றிடங்களும் 2009, 2010, 2011 ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பினை நிறைவு செய்தவர்களைக் கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர்மாதம் 03ஆம்திகதி குறித்த 304 சுதேசமருத்துவ நியமனங்களையும் வழங்கவிருக்கின்றோம். இவ்வாறு 304 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்ட பின்னர் மிகுதியாகவுள்ள வெற்றிடங்களுக்கும் நியமனங்களை வழங்குவோம்.
மேலும் சுதேச மருத்துவத்தில், அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் 2021தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1990 பேர் பட்டப்படிப்பினை நிறைவு செய்து வேலையை எதிர்பார்த்துள்ளனர். இதேவேளை குறித்த 2021 தொடக்கம் 2025 வரையான காலப்பகுதியில் ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி ஆகிய மருத்துவ பட்டப்படிப்பிற்கென கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களால் மொத்தம் 2,709 மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
சுதேச மருத்துவர் வெற்றிடங்கள்
அந்தவகையில் நாட்டிலுள்ள எமது சுதேச வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவர் ஆளணியை விட அதிகமான அளவில் சுதேச பட்டதாரிகள் காணப்படுகின்றனர். எனினும் தற்போதுள்ள சுதேச மருத்துவர் வெற்றிடங்கள் கணக்கீடு செய்து அதற்கமையவே ஆட்சேர்புக்கள் செய்யப்படவிருக்கின்றன. பொது அட்டவணைக்கு அமையவே அந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

அத்தோடு சுதேச மருத்துவத்துறையின் பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதுதொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்மைகளை முன்வைத்துள்ளார்.
குறித்த பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நியமனங்களை மேற்கொள்வதற்கென விண்ணப்பங்களைக் கோருதல், உள்ளீர்த்தல் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டிய தேவையுமுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்றபின்னர் முரண்படுகளின்றி அந்த நியமனங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |