கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பல மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு கூறியமைக்கான காரணம் வெளியானது
மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண
ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்
மற்றும் சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.
புதிய ஆளுநர்கள்
குறித்த ஆளுநர்கள், மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படாமை காரணமாகவே விலக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, லண்டனில் நேற்றைய தினம் (06.05.2023) இடம்பெற்ற பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் விரைவில் பெயரிடப்படவுள்ளனர்.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் பெயரும் பரிந்துரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.