சுரேஷ் சலே மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதா என்பது தொடர்பான உத்தரவை நவம்பர் 27ஆம் திகதி பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ரிட் மனு
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (18) இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, வழக்கு தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறித்த உத்தரவு நவம்பர் 27ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இன்று தனது பதில் சமர்ப்பணங்களை நிறைவு செய்தார்.
மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினர் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதா என்பது தொடர்பான உத்தரவுடன், இடைக்கால நிவாரணம் கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பான தீர்மானமும் நவம்பர் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.