நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டு செல்ல ஜே.வி.பி முற்படுகிறது :ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
அரசியலமைப்புக்கு அப்பாற் சென்று நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டு செல்ல ஜே.வி.பி (JVP) முற்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்க கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த குற்றச்சாட்டை இன்று நாடாளுமன்றத்தில் சுமத்தினார்.
அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு தற்போதைய பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அனுர குமார திசாநாயக்க கோருவது மீண்டும் 1970 மற்றும் 87ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு இட்டு செல்லும் கோரிக்கை ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
69 லட்சம் வாக்காளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதி வெளியேற்ற வேண்டும் என்பதே அனுர குமார திசாநாயக்கவின் முதலாவது கோரிக்கையாக இருகிறது.
இரண்டாவது கோரிக்கையாகவே அவர் பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை பார்க்கிறார் எனவே அவரின் உள் நோக்கம் தெளிவாக தெரிவதாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பில் இருந்து கொண்டே இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி உட்பட்ட அனைவரும் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
எனவே அரசிலமைப்புக்கு அப்பாற் சென்று எவருக்கும் செயற்பட முடியாது இந்த நிலையில் எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து தற்போதைய நிலையில் பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும் என்று பெர்ணான்டோ இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.