அனுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர் இன்றைய ஆள் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆள் அடையாள அணிவகுப்பு அனுராதபுரம் பிரதம நீதவான் நாலக்க சஞ்சீவ முன்னிலையில் நடைபெற்றது.
அதன் பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் தலைமையக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக அறிக்கைகளை சமர்ப்பித்து கோரியிருந்தது.
விளக்கமறியல் உத்தரவு
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் இரகசிய வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்குமாறு சந்தேகநபரினால் அனுராதபுரம் பிரதம நீதவானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் உளவியல் நோய் விசேட வைத்தியர் ஒருவரிடம் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தி மருத்துவ அறிக்கையை பெற்றுக் கொண்ட பின்னர் அவரது கோரிக்கை தொடர்பில் ஆராய்வதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டாளரான பெண் வைத்தியர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியிருந்தது.
எனினும் சந்தேகநபர் சார்பில் இன்றும் சட்டத்தரணி எவரும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
