தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய லொஹான் ரத்வத்த தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் வருகையுடன் அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகச் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தை எதிர்நோக்கிய 8 கைதிகளை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம், சிறைச்சாலைகள் ஆணையாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்தால், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி, 8 கைதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த லொஹான் ரத்வத்தே அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து, அவர்களில் இருவரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து, கொலை அச்சுறுத்தல் விடுத்தமை காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என தெரிவித்து, அதற்கு இழப்பீட்டை வழங்குமாறும் கோரியும் 8 தமிழ் அரசியல் கைதிகள் தமது சட்டத்தரணி ஊடாக அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை காமினி அமரசேகர, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்கள் அமர்வின் முன் இன்று நடைபெற்றுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் சூரியபாலன், மதியராசன் சுலக்ஷன், கசேணன் தராசன், கந்தப்பு கஜேந்திரன், ராசதுரை சிதுராசன், மெய்யமுத்து சுதாகரன், டி. கந்தரூபன் ஆகிய கைதிகள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் எம்.எச்.ஆர்.அஜித், சிறைச்சாலைகள் ஆணையாளர் உபுல்தெனிய, நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை எதிர்நோக்கிய கைதிகளை வடக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதார்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.