ஜனாதிபதி அநுர நீங்கள் தவறு செய்கிறீர்கள்... நாமலின் பகிரங்க எச்சரிக்கை
எதிர்க்கட்சிகளை இலல்லாதொழித்துவிட்டு உங்களது அரசியல் நோக்கங்களை அடைய முடியும் என்று நினைத்தால், ஜனாதிபதி அநுர.., நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடக்குமுறை அரசாங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகளை இல்லாதொழிக்க அரசாங்கம் நினைத்தால் அது தவறான எண்ணம். தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதி எதிர்க்கட்சிகளை ஒழித்துவிட்டதாக கூறுகின்றார். இது ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதியால் சொல்லப்படும் கதை.
இது ஒரு அடக்குமுறை. இந்த அடக்குமுறையின் தொடர்ச்சியாகவே, ஓய்வு பெறும் நீதிபதிகளின் வயதை நீடிக்கும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
அரசாங்கம் தனது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இந்த நாட்டின் நீதி அமைப்பை பயன்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகின்றது.
அடக்குமுறை, சிறையில் அடைத்தல், ஒழித்துக்கட்டுதல் ஆகியவற்றின் மூலம் தனது அரசியல் நோக்கங்களை அடைய முடியும் என்று அரசாங்கம் நினைத்தால், ஜனாதிபதி அவர்களே நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.