நிறைவேற்று அதிகாரம் குறித்து வாய் திறக்காத அநுர
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக வாக்களித்து பதவிக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தற்போது அது குறித்து மௌனம் சாதிக்கத் தொடங்கியுள்ளார்.
ஆட்சிக்கு வந்து ஆறே மாதத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்திருந்தனர்.
சர்வாதிகாரத்தன்மையான ஆட்சி நடத்திய
ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து தற்போதைக்கு ஒருவருட காலத்தை அண்மித்து விட்டது.
எனினும் ஜனாதிபதி முறைமை நீக்கம் குறித்தோ அல்லது அதன் அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் தற்போது ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களோ வாய் திறப்பதில்லை. அதற்குப் பதிலாக ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுர திசாநாயக்க கவனம் செலுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் அதுவரைகாலமும் நிலவிய சம்பிரதாயத்தை மீறி நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களுக்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையே தலைவர்களாக நியமித்துக்கொண்டது.
ஆனால் சர்வாதிகாரத்தன்மையான ஆட்சி நடத்திய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் கூட அவ்வாறு நடைபெறவில்லை.
ஆறே பேர் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்தபோதும் ஜே;.வி.பி.யின் சுனில் ஹந்துன்னெத்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்களாக றியமிக்கப்பட்டனர்.
அதன் காரணமாகவே மஹிந்த அரசாங்கத்தின் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்த முடிந்தது.
தகவலறியும் ஆணைக்குழுவுக்கு
ஆயினும் அவ்வாறான நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறி நடந்து கொண்டதன் மூலம் அரசாங்கம் தன் சர்வாதிகாரப் போக்கு தொடர்பான ஆரம்ப எச்சரிக்கை மணியை ஒலித்திருந்தது.
அதன் பின்னர் கணக்காய்வாளர் நாயகம் விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாகவே தனது சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்தியது.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு எதுவித தொடர்பும் இல்லாத , ஜனாதிபதி அநுரகுமாரவின் நண்பர் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கைப் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் எச்.டி.பி. சந்தன என்பவரை கணக்காய்வாளர் பதவிக்கு நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அரசியலமைப்புப் பேரவை அதனை நிராகரித்திருந்தது.
அதன் காரணமாக சுமார் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இலங்கையின் 42 வது கணக்காய்வாளர் நாயகம் இன்னும் நியமிக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக பதில் நியமனம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் விடயத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இருந்த எம்.டி.எம்.லபார் என்பவரை தவிர்த்துவிட்டு அவரை விட பதவி தரப்படுத்தலில் கனிஷ்ட நிலையில் இருந்த இரண்டு நீதியரசர்களை உச்சநீதிமன்றத்துக்கு ஜனாதிபதி நியமித்திருந்தார்.
அதே போன்று அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது தகவல் அறியும் உரிமை குறித்து கூடுதல் கரிசனை கொண்டிருந்தார். அதனை வலியுறுத்தியிருந்தார். ஆயினும் அவர் ஜனாதிபதியான பின்னர் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு மோசடிப் பேர்வழியான நிமல் போபகேவை தலைவராக நியமிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இன்று வரை அந்தப் பதவிக்கு ஒருவரை நியமிக்காமல் தகவல் அறியும் ஆணைக் குழுவை செயலிழக்கச் செய்துள்ளார்.
ஜனாதிபதி பதவியை நீக்குவது தொடர்பில்
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் உறவினர்களை அரசாங்க பதவிகளுக்கு நியமித்துக் கொள்வதாக குற்றம் சாட்டிய அதே அநுரகுமார திசாநாயக்க , தான் ஜனாதிபதியானவுடன் ஜே.வி.பி.யின் ஏனைய முக்கியஸ்தர்களின் உறவினர்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய பதவிகளுக்கு நியமித்துக் கொண்டுள்ளார்.
அவர்களைப் பற்றிய விபரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்காமல் இருட்டடிப்புச்செய்துள்ளார்.
இவை எல்லாவற்றையும் விட கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியைக் குறித்து கால எல்லையை முதன்முதலாக ஜனாதிபதியே குறிப்பிட்டிருந்தார்.
வழமையாக தேர்தல் ஆணைக்குழு தான் அதனை அறிவிக்கும். ஆனால் அந்தவழக்கத்தையும் அநுரகுமார திசாநாயக்க மீறி நடந்திருந்தார். தற்போதைக்கு அரசியலமைப்புப் பேரவையில் தனது சார்பான உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை முடக்குவது போன்ற விடயங்களிலும் அநுரகுமார திசாநாயக்க முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை நீக்குவதாகவும் அதன் அதிகாரங்களை அனுபவிக்கப் போவதில்லை என்றும் வாய்கிழியக் கத்திய அநுரகுமார திசாநாயக்க, இப்போது முன்னைய ஜனாதிபதிகளை விட கூடுதலான அளவில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். பதவிக்கு வந்த ஒன்பது மாதகாலத்திற்குள் ஆறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அத்துடன் இப்போதெல்லாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவது தொடர்பில் அவர் எதுவித கருத்தும் வெளியிடுவதில்லை.
அதற்குப் பதில் அரசாங்கம் கொண்டிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டு ஒரே மாதத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான மசோதாவை நிறைவேற்றிக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அரசாங்கத்துக்கு அப்படியான எண்ணமே இல்லை என்றே தோன்றுகின்றது.
அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வது தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து முக்கியஸ்தர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




