இந்திய கடற்றொழிலாளர்கள் வருகை குறித்து அநுர முன்வைத்த கருத்து: வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் அதிருப்தி
இந்திய கடற்றொழிலாளர்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத கடற்றொழில் முறைமையினால் இலங்கை கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்திய பிரதமரிடம் எழுத்து மூலம் தெரிவிக்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (19) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய கௌரவத்தை நாங்கள் மதிக்கிறோம். நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அநுர - மோடி கலந்துரையாடல்
அந்த மகிழ்ச்சிக்கு அப்பால் நாங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் எவை நிறைவேற்றப்பட்டுள்ளன? எதிர் காலத்தில் வட பகுதி கடற்றொழிலாளர்களாக இருக்கட்டும், தேசிய ரீதியில் இலங்கை கடற்றொழிலாளர்களாக இருக்கட்டும், அவர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது தொடர்பாக நாங்கள் கையாள இருக்கிறோம்.
இந்திய பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, உடன்படிக்கையில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடபட்டாலும், கடற்றொழிலாளர்கள் விடயம் தொடர்பாக நாங்கள் ஆராய வேண்டிய நிலை உள்ளது. எனினும் ஜனாதிபதி உறுதியான கருத்தை அங்கு பதிவு செய்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையினால் அவர்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத கடற்றொழில் முறைமையினால் இலங்கை கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற விடையத்தை பதிவு செய்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் வார்த்தைகளை விட அவரது கருத்து வேறுபட்டு இருந்தாலும் அது எழுத்து வடிவில் இல்லை. வெறும் கலந்துரையாடலாகவே அமைந்துள்ளது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |