சுங்கத்திணைக்களத்தை கடுமையாக எச்சரித்த அநுர
சுங்கத்திணைக்களத்திலுள்ள சிலருக்கும் பாதாள உலகக்கும்பலுடன் தொடர்பு உள்ளது. அதனால் உத்தியோகபூர்வ அரசாங்கம் இருப்பதைப் போன்று அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் அரச பொறிமுறையொன்றை பாதாள உலகக்கும்பல் தம்பிடியில் வைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
கறுப்பு ஆட்சி ஒழிக்கப்படும்
வெளிப்படையான அரசாங்கத்தைப் போன்றே மறைவான கறுப்பு ஆட்சியொன்று உருவாகியுள்ளது. இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக ஆணையினால் உருவான ஆட்சி மாத்திரமே இருக்க முடியும்.

கறுப்பு ஆட்சி ஒழிக்கப்படும் என உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் அவை நுழைந்துள்ளன. சிலர் மக்கள் பிரதிநிதிகள் ஆகின்றனர். உள்ளுராட்சி தலைவர்களாக தெரிவாகின்றனர். தனியான பட்டியல் தயாரித்து தேர்தலில் போட்டியிட சிலர் தயாராகி இருந்தனர்.
ஆட்சி அதிகாரம் ,எம்.பிகள் உருவாக்குவது வரையான ஆரம்ப விதை நடப்பட்டுள்ளது. இதனை அடையாளங் கண்டுள்ளோம். இந்த நிலை தானாக உருவானதல்ல. நீண்ட காலமாக அரசியல் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் தான் இது உருவானது. பிரஜைகள் அச்சத்துடன் உள்ளனர்.
அதிகாரிகளின் ஆதரவு
சில வர்த்தகர்கள் இதிலிருந்து ஒதுங்க அஞ்சுகின்றனர்.போதைப் பொருள் விற்பனை செய்வதில் இருந்து ஒதுங்கினால் சுடப்படுகின்றனர். இதன் பின்னணியில் தெளிவான அரசியல் ஆசீர்வாதம் உள்ளது.

அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறது. சிலருடைய சொத்துக்களை பார்த்தால் உழைப்பின் ஊடாக இந்தளவு சொத்துக்களை ஈட்ட முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்க்கமான கட்டத்திற்கு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. நாம் இதனைச் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என எம்மிடம் பலரும் கூறியுள்ளனர்.
இதனை மாத்திரம் நிறைவேற்றுங்கள் புண்ணியம் கிடைக்கும் என சில தாய்மார் கூறுகின்றனர்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பலரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam