சாட்சி வழங்க அஞ்சியவர்கள் சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளனர் ! ஜனாதிபதி அநுர
மிக முக்கிய விசாரணை சம்பவம் தொடர்பில் இதுவரை மௌனம் காத்து வந்தவர்கள் தற்போது வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர். சாட்சி வழங்குவதற்கு அச்சப்பட்டவர்களும் சாட்சி வழங்கி வருகின்றனர் எனவே, விசாரணைகளை மிகவும் சூட்சுமமாக நடத்த வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் சம்பவத்துக்குப் பொறுப்பு கூறவேண்டிய குழுவின் பெயர் விவரம், ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கடந்த 30 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு
எனவே, உயிர்த்த ஞாயிறுக்கு முன்னதாக மேற்படி தகவல்களை ஜனாதிபதி வெளியிடுவார் என முழு நாடும் எதிர்பார்த்தக்கொண்டிருந்த நிலையிலேயே, பதுளையில் நேற்று(19) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது, தற்போது தகவல்களை வெளியிட முடியாது என்ற தொனியில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
"முழு நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சம்பவம் (உயிர்த்த ஞாயிறு தாக்குதல்) தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகின்றது.
விசாரணையின் அடுத்த கட்டத்தை மிகவும் அவதானத்துடனும், சூட்சுமமாகவும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே, சில விடயங்களை உங்களால் தற்போதே அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விசாரணைகள்
விசாரணைகள் சிறப்பாக இடம்பெறுகின்றன என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு வழங்க முடியும். இதுவரை வாய் திறக்காதவர்கள், வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர்.
சாட்சி வழங்குவதற்கு அச்சப்பட்டவர்கள், சாட்சி வழங்கி வருகின்றனர். தொடர்பு இல்லை எனக் கூறியவர்களின் தொடர்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
எனவே, விசாரணை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. குற்றங்களை காலத்தால் மூடிமறைக்க இடமளிக்கமாட்டோம். உரிய வகையில் நீதி நிலைநாட்டப்படும் என்றார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் என ஜனாதிபதி வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அதனை மையப்படுத்தியதாகவே மேற்படி கருத்துக்களை அவர் வெளியிட்டார் என்பதை அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.