தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..!
இலங்கையின் ஜனநாயக அரசியலில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளில் ஒன்றையேனும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. கழுதை தேய்ந்து கட்டறும்பாகிய கதையாய் தமிழர் அரசியல் உரிமை தேய்ந்து போய் கிடக்கிறது.
2009 முள்ளிவாய்க்கால் பேரவளத்தின் பின்னர் கிடைத்த வரத்தை தமிழ் தலைமைகள் சாபமாக்கி விட்டனர். சந்தர்ப்பங்களை சாதகமாக்கி அறிவியலை தந்திரமாக உபயோகித்து சாகச வித்தைகாட்ட வல்லவர்களால் மட்டுமே அரசியல் வெற்றிபெற முடியும்.
இராஜதந்திரம் என்ற சொல்லின் அகரவரிசையை கூட தமிழ் தலைமைகளால் எட்ட முடியாமல் தோற்று அதால பாதாளத்தில் விழுந்து கிடக்கின்றனர். ஆயினும் வாய்ச் சொல்லில் வீரடி என்பதற்கு இணங்க வீர முழக்கம் முழங்குவதை மட்டும் இன்னும் நிறுத்தவில்லை.
முள்ளிவாய்க்கால் பேரவலம்
முள்ளிவாய்க்கால் தந்த பெரும்வலியும், பேரவளமும் இனப்படுகொலை என்ற பேரழிவை தந்தாலும் அது கூடவே இனப்படுகொலைக்கான நீதி என்ற ஒரு வரத்தை தந்து விட்டே சென்றது. மாண்டு போன எங்கள் உறவுகளின் தந்த முதுசத்தை, அவர்கள் மரணித்தபோது தந்த இனப்படுகொலை என்ற வரத்தை தமிழ் தலைமைகள் எங்குமே பயன்படுத்தாமல் சாபம் ஆக்கிவிட்டனர்.
சர்வதேச அரசியலில் எதையும் சாதிக்கவில்லை மாறாக நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து அவர்களை பாதுகாப்பதிலும் அவர்களை தூய்மைப்படுத்துவதிலும்தான் இவர்களுடைய அரசியல் சிங்கள தேசத்திற்கு சேவகம் செய்துவிட்டது. அரசியலில் எப்போதும் எங்கும் அண்டை நாட்டு அரசியல் உறவு என்பது மிகவும் முக்கியமானது.
அண்டை நாட்டு அரசியலின் சாதக பாதகத் தன்மையே சர்வதேச அரசியலில் பிரதிபலிக்கும். இந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தம்மை ஒரு அரசாக சிந்தித்து அரசாகத் தொழிற்பட வேண்டும். விண்ணப்ப அரசியலையும், வேண்டுகோள் அரசியலையும், கோரிக்கை அரசியலையும், பிச்சாபாத்திரம் ஏந்தும் அரசியலையும் செய்து கொண்டிருப்பதோடு எதிரியுடன் கூட்டி சேர்ந்து நண்பர்களை பகைவர்களாக்கும் அழிவு அரசியலையும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
ஈழத் தமிழர்களின் அரசியலில் அண்டை நாட்டு அரசியல் உறவில் நாம் பெறும் பின்னடைவை சந்தித்திருக்கிறோம். முள்ளிவாய்க்காலின் பின்னர் இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தமிழ் தலைமைகள் இந்தியா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் எந்தவிதமான ஒரு முன்னெடுப்பையும் செய்யவில்லை.
மோடியின் வருகை
அதற்கு பின்னே பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கத்தில் 2014 மே 26 இல் நரேந்திர மோடி இந்தியாவின் 14ஆவது பிரதமராக பதவியேற்ற உடன் அவர் ஈழத் தமிழர்கள் தொடர்பாக சாதகமான செய்தியையே தெரிவித்தார்.
அதனை மேலும் வளர்த்துச் செல்ல தமிழ் தலைவர்களால் முடியவில்லை. அந்தக் காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தேன்நிலவை அனுபவித்த தமிழ்த் தலைவர்கள் எதிர்கட்சித்தலைவர் மாளிகையில் அசுமாசமாக நீட்டி நிமிர்ந்து படுத்து உறங்கிய காலம் என்று சொல்வதே பொருந்தும்.
இத்தகைய சூழ்நிலையில் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 மார்ச் 2015 முதன் முறையாக இலங்கைக்கு வந்தார். அன்றைய தினமே தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் என்று சொல்லப்படுகின்ற சம்பந்தனை சந்தித்தார். அப்போது அவர் ""டெல்லிக்கு வாருங்கள் தமிழ் மக்கள் தீர்க்கமாக பேசுவோம்"" என அழைப்பு விடுத்திருந்தார்.
அரசியலில் ராஜதந்திர பரிபாசை என்ற ஒன்று உண்டு. அந்த மொழியில்தான் சம்மந்தருடன் மோடி பேசினார். மோடியின் அழைப்பு ராஜேந்திர பரிபாசை என்பதை சம்பந்தன் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருந்தாரா? அல்லது அன்றைய ஜனாதிபதி மைத்திரி சிறுசினாவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவோ செல்ல வேண்டாம் என ஒரு தேனீர் கோப்பை அருந்துகின்ற போது வினையமாக கேட்டுக் கொண்டார்களா?
இவற்றில் ஏதோ ஒரு காரணத்திற்காகவே மோடியின் அழைப்பை ஏற்று டெல்லிக்கு செல்லவில்லை. மாறாக இவர்கள் இந்தியாவிற்கு சென்றால் சிங்களத் தலைவர்கள் முகம் சுழிப்பார்கள் என்பதற்காக செல்லாமல் தவிர்த்தார்களா? இதனை தமிழர் கிராமிய வழக்கில் ""முகத்துக்கு அஞ்சி - -- -(விபச்சாரம்) குலத்துக்கு ஈனம் வந்ததாம்"" என்ற பழமொழிதான் தமிழ் தலைமைகளின் செயலுக்கு பொருத்தமானதாக தெரிகிறது.
அரசியல் தீர்வு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்கள் சார்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஏதேனும் ஒன்றை பெற்றுக் கொடுத்து விடவேண்டும் என்ற ஒரு சிறிய விருப்பு இருந்தது என்பது உண்மை. அந்த விருப்பை சிங்கள தேசம் நன்குணர்ந்திருந்தது அதிலும் குறிப்பாக கடும் தீவிர இனவாத கட்சி யான ஜே.வி.பினர் அன்றைய காலத்தில் அதனை வெளிப்படுத்தி இருந்தனர்.
"இலங்கையின் அரசியலமைப்பு ரீதியாக தமிழர்களுக்கு தன்னாட்சியை பெற்றுக் கொள்வதற்கான நாடகம் மோடி, மைத்திரி, சம்பந்தன் ஆகிய மூம்மூர்த்திகள் மூலம் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அந்த நாடகம் இன்று இலங்கையில் சம்பந்தனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 27000 படையினர் உயிர்களை அர்ப்பணிப்பு செய்து மீட்ட நாட்டை காட்டிக் கொடுக்க அரசு முயற்சிக்கின்றது" என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், எம்.பி.யுமான விமல் வீரவன்ச பிட்டக்கொட்டுவவிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில 16-05-2016 இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே குறிப்பிட்டார்.
எனவே இந்திய ராஜ தந்திரிகளின் ராஜதந்திர பரிபாசையை சிங்கள தேசம் நன்கு உணர்கிறது. அதற்கு எதிராக விமல் வீரவன்சாவின் பத்திரிகையாளர் மகாநாட்டு உரை நல்ல உதாரணம். பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மொத்தம் நான்கு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 2015 மார்ச் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்.
அங்கு யாழ்ப்பாண நகரத்துக்கு மத்தியில் கலாசார மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல்லை நாட்டினார். இந்திய உதவி திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளை மக்களுக்கு கையளித்தார்.
அத்தோடு அவருடைய முதலாவது ஆலய தரிசனமாக நல்லூர் கந்தசாமி கோவிலை தெரிவு செய்திருந்தார். இந்தத் தெரிவு என்பதும் ராஜதந்திர செயலாகவே அமைந்தது. அன்றைய யாழ்ப்பாண ராட்சியத்தின் ராஜதந்திர நகர்வுகள் அனைத்தும் நல்லூர் கோயிலை மையப்படுத்தியே நிகழ்ந்தது என்பதனாலேயே வரலாற்றுணர்வேடு அதனை அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.
மோடியின் நிலைப்பாடு
ஆயினும் அதற்கான ஒழுங்குபடுத்தலை தமிழ் தலைமைகள் சரியாக முன்னெடுக்கவில்லை. நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் நிர்வாக ஒழுங்குபற்றி மோடிக்கு அல்லது இந்திய தரப்புக்கோ சரியாக யாரும் எடுத்துக் கூறவில்லை. நல்லூர் கந்தசுவாமி கோயில் குறித்த நேரத்துக்கு மாத்திரமே கதவுகள் திறக்கப்படும். மற்றைய நேரங்களில் எவர் வந்தாலும் கதவு திறக்கப்பட மாட்டாது.
அது அவர்களுடைய கண்டிப்பான விதி. யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து அரசு படைகள் கைப்பற்றிய பின்னர் இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ரத்வத்தை உள்ளிட்டோர் நல்லூர் கோயிலுக்கு தரிசனம் செய்ய குறித்த நேரத்தை தவிர்ந்த நேரத்தில் சென்று வழிபட கோயில் கதவைத் திறக்கும்படி கேட்ட போதும் ராணுவ அழுத்தமும் உயிர் அச்சுறுத்தல் இருந்த காலத்திலும் எதனையும் பொருட்படுத்தாமல் எதற்கும் அஞ்சாமல் கோயிலின் ஒழுங்கு விதியை முதன்மைப்படுத்தி கோவிலின் தர்மகத்தாவான மாப்பாணர் கதவை பூட்டி வைத்துவிட்டார்.
இலங்கை ஜனாதிபதிக்கே கதவை திறக்கவில்லை. ஆகவே அந்தக் கோயிலின் ஒழுங்கு விதிகளை எடுத்து கூறாமை என்பது தமிழ் தலைவருடைய குறைபாடு மாத்திரம் அல்ல யாழ்ப்பாணத்தில் இருந்த துணை தூதரகத்தின் குறைபாடாகவும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆயினும் அந்தத் தருணத்திலும் கூட நல்லூர் கந்தனுடைய தெரிவு பிசகி போக இலங்கையின் வரலாற்று புகழ்பெற்ற நான்கு ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத்திற்கு மோடி சென்று தரிசனம் செய்தார் என்பதிலிருந்தும் ராஜதந்திர ரீதியான செய்தி ஒன்றை தமிழ் தரப்புக்கு விட்டுச் சென்றார் அதையும் எமது தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ளவில்லை.
அதன் பின்னர் 11-12, 2017ல் இரண்டாவது முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்தார். அதன் பின் ஜூன் 9, 2019ல் மூன்றாவது பயணத்தின் போதும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த தவறவில்லை. ஆயினும் இவ்வளவு காலமும் இந்திய அரசியலில் நடைமுறையில் இருந்த வட- கிழக்குத் தமிழர் சார்ந்த விவகாரங்களை அதிகம் பேசப்பட்டன.
அதிகமாக வட-கிழக்கு சார்ந்த அரசியல் தலைமைகளுடன் தான் இந்திய தரப்பினர் பேசினர். ஆனால் 2019ல் அவர்கள் மலையக அரசியல் தலைவர்களுடன் அதிக நெருக்கம் காட்டியதை காணமுடிந்தது.
மலையத் தமிழர் சார்ந்த பிரச்சினைகள் பலவும் விவாதிக்கப்படுவதையும் காணமுடிந்தது. சமகாலத்தில் மலையக அரசியல் தலைமைகள் தமிழகத்து அரசியல் தலைமைகளுடன் அதிக நெருக்கம் காட்டுவதையும் அவர்களுடன் அதிக ஒத்துழைப்பை பெறுவதையும் அவதானிக்க முடிந்தது.
இப்போக்கினை பார்க்கின்ற போது வட-கிழக்கு தமிழர்கள் இந்திய அரசியல் தலைமையுடன் ஒத்துழைக்கவில்லை என்ற கோபம் இந்திய தலைவர்களுக்கும், ராஜதந்திர வட்டாரங்களுக்கு உண்டு என்பதை உணரமுடிகிறது.
தமிழ் தலைமைகளை அழைத்தும் அவர்கள் டெல்லிக்குச் செல்லவில்லை என்பது இந்திய அரசியல் வட்டாரங்களுக்குப் பெருத்த அவமானமாகவும் கருதப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் இலங்கையில் ஒரு பலமான ஆதரவு சக்தியை தேடி மலைகத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறார்கள் என ஊகிக்க முடியும். புவிசார் அரசியலில் இலங்கைத்தீவின் அரசியலை இந்திய அரசியலை மேவிக்கு செயல்பட ஒருபோதும் முடியாது.
அவ்வாறு இந்தியாவை எதிர்த்து இலங்கை தீவுக்குள் எதனையும் செய்து விடவும் முடியாது. ஏனெனில் இந்திய பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருக்கின்ற புள்ளிதான் இலங்கைத் தீவு என்ற அடிப்படையிலும் இந்தியாவின் புவிசார் அரசியல் விருப்பை மீறிய செயலில் மேற்குலகம் ஒருபோதும் ஈடுபடாது. அதேபோல இலங்கை அரசாலும் இந்தியாவிற்கு எதிராக இலகுவில் எத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபட முடியாதவாறு புவிசார் அமைவிட நிர்ணயம் நிர்பந்திக்கிறது.
இந்த புவிசார் அமைவிட நிர்ணயத்தின் இயற்கை விதியிலிருந்து ஈழத் தமிழர்களும் விடுபட முடியாது. ஆகவே இந்த இயற்கை நியதிகளை எமக்கு ஏற்றவாறு சாதகமாக கையாள்வதிலேயே தமிழர் தாயக இருப்பும் தமிழ் மக்களின் வளமான வாழ்வுக்கான அடித்தளமும் அமைந்துள்ளது. பிரதமர் மோடி இலங்கைக்கு தனது நான்காவது பயணத்தை ஏப்ரல் 4-6 ஆகிய திகதிகளில் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தில் அவர் திருகோணமலைக்கு பயணம் செய்ய இருந்தமை பாதுகாப்பு காரணங்களை காட்டி தடுக்கப்பட்டு விட்டது. ஆயினும் அவர் அனுராதபுரம் போதி விருட்சத்தின் பூஜைக்கு பின் அங்கிருந்து உலங்குவானவுர்தி மூலம் மன்னார் வளைகுடாவையும், ராமர் பாலம் என கருதப்படுகின்ற மன்னார்-ராமேஸ்வர இடைப்பட்ட மணல் திட்டுகளை பார்வையிட்டுக் கொண்டு பாம்பன் பாலத்தின் புதிய பாலத்தை திறந்து வைத்தார்.
இந்தச் செய்தி அவர் இலங்கையை இந்தியாவுக்கு இடையில் ராமர் பாலத்தை கட்டுவதற்கு அவர் முழு விருப்புடனும் வீரியத்துடனும் செயற்படுகிறார் என்பதை வெளிக்காட்டுகிறது.
ராமர் பாலம்
பௌத்த சிங்கள அரசியலைப் பொறுத்தளவில் இலங்கை தீவாக இருப்பதை அதற்குப் பலம். இலங்கை தீவாக இருந்ததனால்த்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆதிக்கப்படர்ச்சி இலங்கைக்குள் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது. பாக்குநீரிணை இல்லையேல் இலங்கையில் பௌத்த மதமும், சிங்கள மொழியும் என்றோ காணாமல் போயிருக்கும். ஆகவே சிங்கள தேசத்தை பொறுத்த அளவில் இலங்கை தீவாக இருப்பதை அவர்கள் உள்ளுற விரும்புகிறார்கள்.
ஆயினும் பிராந்திய அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இராமர் பாலத்தைக் கட்டுவோம் என இந்திய அரசுக்கு உறுதி அளிக்கிறார்கள். ஆயிரம் பாலம் கட்டுவதற்கு அவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள். பாலம் கட்டுவதில்லை என்ற முடிவை எடுத்த பின்னர்தான் ரணில் விக்கிரமசிங்க பாலம் கட்டுகின்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டார் என்பதுதான் உண்மை.
ஆகவே ““எதிரி எதனை விரும்புகிறானோ அதை நீ எதிர், எதிரி எதனை எதிர்க்கிறானோ அதை நீ ஆதரி““ என்ற ராஜதந்திர முதுமொழிக்கு அமைய சிங்கள தேசம் உள்ளுற எதிர்க்கின்ற ராமர் பாலக் கட்டுமானத்தை தமிழர்கள் ஆதரிப்போம். அதன் மூலம் சிங்கள தேசத்திற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்துவோம். இதன்மூலம் இந்திய தரப்புக்கு தமிழர் நல்லெண்ண சமிச்சையை காட்டுவோம்.
இதுவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான பாதையை திறக்கும், அதுவே வழியையும் காட்டும். இதுவே கடந்தகாலத்தில் இந்திய வெளியுறவு துறை சார்ந்து தமிழர் தரப்பு விட்ட தவறுகளை சீர்செய்வதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
இந்தியாவின் வெளியுறவு அரசியல் என்பது இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் இருந்தே மேம்படுத்தப்படுகிறது. ஆகவே ஈழத்தமிழர்கள் தமிழகத்து அரசியலுடனும் தம்மை இணைத்துக் கொள்ளவில்லை, தமிழக அரசியல் தலைவர்களுடன் கைகோர்க்கவில்லை, தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவையும் பெறவில்லை, அதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை. ஆனால் இந்திய அரசுக்கு இந்துமா சமுத்திரத்தின் ஆதிக்க வலுச்சம நிலையை தமது பக்கம் வைத்திருப்பதற்கு இலங்கையில் தமது செல்வாக்கை பலப்படுத்துவது அவசியமானது.
இந்த செல்வாக்கை அவர்கள் இரண்டு வழிகளில் நிலைநாட்ட முடியும். ஒன்று சிங்கள தேசத்துடன் அவர்கள் கூட்டுச்சரலாம். அல்லது விட்டுக் கொடுப்பு அரசியலைச் செய்து தற்காலிகமாக தமது தேவைகளை பூர்த்தி செய்யலாம். இரண்டாவது தமிழ்த்தரப்பை அரவணைத்து சிங்கள தேசத்தை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கி தமது தேவை பூர்த்தி செய்யலாம்.
இங்கே பரஸ்பர நலன்களே உறவுகளை தீர்மானிக்கும். இந்த பரஸ்பர நலன்களில் தமிழ் மக்களோ அல்லது சிங்கள தேசமோ எது இந்திய நலனுக்கு அதிக சாதகத்தை கொடுக்கிறதோ அந்தப் பக்கமே இந்திய ராஜதந்திரம் தொழிற்படும். இது பொதுவாக அனைத்து பன்னாட்டு அரசியல் ராஜதந்திர நடைமுறைகளிலும் உள்ள பொதுப்பண்பு. ஆகவே இங்கே தர்மங்கள், நியாயங்கள் கருத்துக் கொள்ளப்பட மாட்டா. அனைத்தும் நலன்களுக்கூடாகவே நிர்ணயம் பெறுவதனால் அவரவர் நலன்களை பெறுவதற்கான முஸ்த்திப்புக்களே எங்கு உள்ளது.
அந்த நலன்களினுாடான வாய்ப்புகளை சரிவர பயன்படுத்துவதுதான் ராஜதந்திரம். இப்போது சர்வதேசத்தையும், இந்தியாவை எவ்வாறு தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஒரு வழி வரைபடமாக ஒரு வெளியுறவு கொள்கையை முற்றிலும் நடைமுறை சார்ந்து வகுக்க வேண்டும்.
அத்தகைய ஒரு வெளியுறவுக்கு கொள்கை வகுத்து செயற்பட்டால் மட்டுமே நாம் எதனையும் சாதித்திட முடியாது. நான்காவது முறையாக கடந்தவாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்திருக்கிறார் அவரை சரியாகப் பயன்படுத்தி தமிழ் மக்களால் ஒரு குறிப்பிட்ட அரசியல் முன்னகரை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தன ஆயினும் அவை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. கூட.டாக மூன்று கட்சிகளைச் சார்ந்த தமிழ் பிரதிநிதிகள் ஒன்றாகவே சந்தித்தார்கள்.
ஆயினும் 45 நிமிடங்கள் மட்டுமே நீடித்த அந்தப் பேச்சுக்களில் இவர்களால் அவர்களுக்கு எதனையும் கொடுக்க முடியவில்லை. அதேபோல அவரிடம் இருந்து எதையும் பெறவும் முடியவில்லை. காரணம் அதற்கான எந்த ஒரு திட்டமிட்ட அரசியல் பொறிமுறையும் தமிழ் தலைமைகளிடம் இல்லை. இவர்கள் வெறும் விண்ணப்ப அரசியலையே வாய்ச்சொல்லில் விண்ணப்பித்து விட்டு வந்து விட்டனர்.
ஆனாலும் ஊடகப் பத்திரிகைகளில் தாம் வாய்ச் சொல்லில் வீரரடி என்பதை நிரூபிக்க தவறவில்லை. சம்பந்தன் மாவையை பின்தொடர்ந்து அரங்கிக்கு சுமந்திரனும் சிவஞானமும் வாய்வீச்சை ஆரம்பித்து விட்டனர்.
தமிழ் மக்கள் தோல்வியின் ஆதளபாதாளத்தில் கிடக்கின்றனர் என்பதை இந்தத் தலைவர்கள் சற்றும் எண்ணிப் பார்க்கவில்லை. இவர்களின் நிலையை காணுகின்ற போது இராமாயணத்தின் கும்பகர்ணன் வரைபடத்தில் கும்பகர்ணனின் நிலையை ஒத்ததாகவே தமிழ் தலைமைகளின் கையறுநிலை உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 16 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
