ஜனாதிபதியின் உரையை விமர்சிக்க எந்தவித அருகதையும் கிடையாது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ஆற்றிய உரைகளைத் தமிழ்த் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது. வடக்குக்குச் சென்ற ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டே உரையாற்றியுள்ளார்.
அவரின் உரை தமிழ்க் கட்சியினருக்குத் தேர்தல் தோல்விப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் உளறுகின்றார்கள். தமிழ் மக்களின் எமக்கான ஆதரவைத் தமிழ்க் கட்சியினரால் தடுத்து நிறுத்த முடியாது.
அநுர ஆற்றிய உரை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ அல்லது அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியினரோ ஒருபோதும் இனவாத, மதவாத அரசியலை ஆதரிக்க மாட்டார்கள்.
இனவாதத்தையும் மதவாதத்தையும் வைத்துத்தான் வடக்கிலும், தெற்கிலும் கடந்த காலங்களில் அரசியல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முடிவு கட்டும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தியை நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்.
வடக்கில் திஸ்ஸ விகாரையை வைத்து இனவாத அரசியலை முன்னெடுக்க எமது அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத்தியில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி, உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அமைத்தால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும்.
ஏனெனில் ஊழல், மோடி இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே. இதை எமது ஜனாதிபதியும் எமது கட்சி உறுப்பினர்களும் வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது" என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
