பிரிக்ஸில் இணையும் ஆர்வத்தை மோடியிடம் புதுப்பித்த அநுர
பிரிக்ஸ் அமைப்பில்(BRICS) இணைவதற்கான இலங்கையின் ஆர்வம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) தனது மூன்று நாள் இந்திய அரசு பயணத்தின் போது, இதற்கான விருப்பத்தை மீண்டும் தெரிவித்துள்ளதாக இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோரிக்கை
எனினும், எதிர்காலத்தில் பிரிக்ஸ அமைப்பில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கும்போது மட்டுமே இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு முதல் பட்டியலில் இருந்த உறுப்பினர்களைத் தவிர வேறு எந்த புதிய உறுப்பினர்களையும் பிரிக்ஸ் இன்னும் பரிசீலிக்கவில்லை.
இருப்பினும், புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில், பிரிக்ஸ்க்குள் ஒருமித்த கருத்து ஏற்படும்போது, இலங்கை வெளிப்படுத்திய ஆர்வத்தை இந்தியா, நிச்சயமாக கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்று இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான மன்றமான பிரிக்ஸில் தற்போது ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர், பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, ஈரான், ரஸ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவே அவையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |