பலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ள ஜனாதிபதி அநுர!
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை உரையாற்றவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையின் 80 ஆவது கூட்டத் தொடரில் பலஸ்தீன விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறவுள்ளது.
பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தமது தீர்மானத்தை குறித்த தொடரில் அறிவிக்கவுள்ளன.
பலஸ்தீன விடுதலை
இந்நிலையிலேயே பலஸ்தீன விடுதலைக்குரிய ஆதரவை இலங்கை ஜனாதிபதியும் வெளிப்படுத்துவார் எனத் தெரியவருகின்றது.
ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் இன்று அமெரிக்கா நோக்கி பயணமாகின்றனர்.
இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு பலஸ்தீன ஜனாதிபதிக்கு அமெரிக்காவால் விசா மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் உரையாற்றுவதற்கு அனுமதிக்கும் பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் இந்த விஜயத்தின் போது அநுரகுமார திஸாநாயக்க இரு தரப்பு சந்திப்புகளில் ஈடுபடுவார்.
அதேபோல் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அமெரிக்கா வாழ் இலங்கை சமூகத்தினரையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து எதிர்வரும் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான தனது அதிகாரபூர்வ பயணத்தை ஜனாதிபதி அநுரகுமார ஆரம்பிக்கவுள்ளார்.
28 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் மற்றும் ஜப்பான் பேரரசர் ஆகியோருடன் சந்திப்புகளை அவர் நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்புவார்.



