அநுர ஆட்சிக்கு கனேடிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு
இலங்கைக்கான கனேடிய (Canada) உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து இலங்கையின் புதிய ஆட்சிக்கு கனேடிய அரசாங்கம் தமது முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது, இன்று (02.09.2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கு கனேடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை எரிக் வோல்ஷ் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
மேலும், ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.
அதேவேளை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியன வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய எரிக் வோல்ஷ், உத்தேச சீர்திருத்தங்களின் மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான மிகவும் பொருத்தமான சூழல் இலங்கையில் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை தொடர்புபட்டிருப்பது மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் கனேடிய அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்குவதாகவும் எரிக் வோல்ஷ் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |