உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : பேராயருக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி
புதிய இணைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பெரும்பான்மையான மக்கள்
இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித், ”இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேவையான விடயங்களை கொண்டு வருவதற்கான, முக்கிய பணியை இலங்கை மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
இலங்கையில் இது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எங்களின் முழு ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் உறுதியாக வழங்குகின்றோம்.
எப்போதும் ஏழை மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியைத் தொடருமாறு நான் புதிய ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தைத் தயார் செய்வதாக புதிய ஜனாதிபதி தனக்கு உறுதியளித்துள்ளார்” என கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நேற்று (23.09.2024) விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரை சந்தித்து நலம் விசாரித்ததுடன் பரஸ்பர கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளார்.
அதனையடுத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த பேராயர் கா்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளை துரிதமாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில் இதன்போது கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
அனுரவின் வாக்குறுதி
அது தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதி அளித்துள்ளதாகவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |