உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் உறுதிமொழி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு இன்று (06) காலை சென்றிருந்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வாக்குகளின் பின்னணி
அத்துடன், ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அவர், ”இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21ஆம் திகதியே நிகழ்ந்தது. அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்ல, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாக கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாது, வெளிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்றது, அரசியலுக்காக நூற்றுக்கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும், அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டும்.
இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்புபட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது.
நியாயமான விசாரணை
அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.
அதேபோல், இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறுகின்றேன்.
சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு, ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயுள்ளது. மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்து. அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது முக்கியமானது.
கடந்துபோன 05 வருடங்களில் ஒவ்வொரு ஏப்ரல் 21ஆம் திகதியும் வீதிகளிகளிலும் சந்திகளிலும் ஒன்றுகூடிய மக்கள் அவர்களின் மனதிலிருந்த நீதி தொடர்பிலான எதிர்பார்ப்புக்களையே வௌிப்படுத்தினர்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இதன்போது கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,
"உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கான நியாயம் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களினால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டாலும் பிரச்சினைக்கு காரணம் என்னவென்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை உள்ளது. அவரின் நேர்மையை பாராட்டுவதோடு, அந்த நேர்மையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவார் என்ற நம்பிக்கையும் உள்ளது” என கூறியுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |