தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தம்: சூழ்ச்சியில் ஈடுபட்ட அநுர
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தை நிறுத்த ஜனாதிபதி அநுர சதித்திட்டம் தீட்டியதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், "2006ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து அரசாங்கத்தை கவிழ்க்கவே சூழ்ச்சி செய்யப்பட்டது.
சூழ்ச்சியின் புள்ளி..
அந்த சூழ்ச்சியின் முக்கிய புள்ளியாக ஜனாதிபதி அநுர செயற்பட்டார். அது மட்டுமல்ல, கோட்டாபய கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனம் மேற்கொண்ட போது நீங்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி கோவிட் பரவலை அதிகரித்து நாட்டை ஸ்தம்பிதமடைய செய்ய முயற்சித்தீர்கள்.
மேலும் பொருளாதார வீழ்ச்சியில் நாடு மூழ்கி இருக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டாம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து அன்றிலிருந்து இன்று வரை சூழ்ச்சிகளை அறங்கேற்றிய ஜே.வி.பியும் நீங்களும் எங்கள் பக்கம் கைநீட்ட வேண்டாம்.
அத்தோடு நாடாளுமன்றத்தில், கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்டது நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் என்று சொன்னீர்கள் அதுவும் பொய்யாகும். நீதிமன்றத்தில் முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்வதற்கு எவ்வித கோரலும் விடுக்கப்படவில்லை. பொல்காவல மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த அறிக்கையில் விசாரித்து வாக்குமூலம் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரை கைது செய்து கொலை குற்றச்சாட்டை சுமத்தி பிணையில் விடுவிக்க முடியாத படி செய்தது அரசாங்கமே தவிர நீதிமன்றம் அல்ல அனைத்தையும் திட்டமிட்டு செய்து விட்டு அதிகாரிகள் மீது பலியை போடுகிறீர்கள்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



