ஹிட்லரின் மறுபிறவியா அநுர..! ஒற்றுமைகளை சுட்டிக்காட்டும் கம்மன்பில
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஜெர்மனியின் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் மறுபிறவியா என்பது சந்தேகமாக இருப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“1971ஆம் ஆண்டு ஆயுதம் ஏந்திய பாசிசவாதிகள் நாட்டை கைப்பற்ற முயன்ற போது நாம் அதற்கு முகம்கொடுத்தோம். மீண்டும் 1987ஆம் ஆண்டு T-56 துப்பாக்கிகளை எடுத்துக்கொண்ட வந்த பாசிசவாதிகளுக்கும் நாம் முகம்கொடுத்தோம்.
ஒற்றுமைகள்
வடக்கில் இருந்து எங்கள் தாய்நாட்டை பிளவுபடுத்த முயன்ற போது அதனையும் நாங்கள் முறியடித்தோம். ஆனால், இன்று சோஷலிச முகமூடியை அணிந்துகொண்டு பாசிசவாதிகள் மக்களின் வாக்குகளைப் பெற்று பலத்தை பெற்றுள்ளனர்.
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அடோல்ப் ஹிட்லர், ஆட்சியை கைப்பற்றியதும் மக்களின் வாக்குகளால் தான். ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததற்கும் அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததற்கும் பல அதிசய ஒற்றுமைகள் உள்ளன.
ஹிட்லர் பலத்தைப் பெற்றதும் அநுர பலத்தை பெற்றதும் தொழிலாளர் கட்சியை முன்னிலைப்படுத்தியே ஆகும். ஜெர்மனியில் தேர்தல்களில் சராசரியாக 3 சதவீத வாக்குகளை பெற்று தோல்விகளை சந்தித்த நாசி கட்சி திடீரென பலத்தை பெற்றுக்கொண்டது.
1919ஆம் ஆண்டு ஹிட்லரின் கட்சியும் பெயரை மாற்றிக்கொண்டது. இன்று மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளது.
நாட்டின் எதிர்காலம்
1920களில் ஜெர்மனியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணமாக வைத்து நாசிக் கட்சி எழுச்சி பெற்றது. அதேபோல, 2022 பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி தேசிய மக்கள் எழுச்சி பெற்றது.
மேலும், நூற்றுக்கு 37 சதவீத வாக்குகளை வைத்தே ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றினார். நூற்றுக்கு 42 சதவீத வாக்குகளை வைத்தே அநுர ஆட்சியை கைப்பற்றினார்.
நாளை இலங்கைக்கு என்ன நடக்கும் என நாங்கள் அறிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் அன்று ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனிக்கு என்ன நடந்தது என நாம் தேடிப்பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



