சிறிய கூடாரங்களுக்குள் கூட்டங்களை நடத்தும் நிலையில் அநுர அரசு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசு, ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் மக்கள் ஆதரவை இழந்து, ஒரு சிறிய கூடாரத்துக்குள் கூட்டங்களை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நிவாரண அறிவிப்புகள்
மேலும் தெரிவிக்கையில், "புளத்சிங்ஹலவில் ஆரம்பிக்கப்பட்ட அரசின் முதலாவது பேரணியில் நாற்காலிகளை இடைவெளிவிட்டுப் போட்டு ஒரு சிறிய கூடாரத்துக்குள்ளேயே கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் பிரம்மாண்ட கூட்டங்களை நடத்திய இவர்கள், தற்போது 1,800 முதல் 2,000 பேருக்கு மேல் சேர்க்க முடியாத ஒரு கூடாரத்துக்குள் கூட்டத்தை நடத்திவிட்டு மக்கள் கூட்டம் வந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது.
அரசின் வீழ்ச்சியையும் மக்கள் ஆதரவு இன்மையையுமே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த மக்கள் ஜனாதிபதியிடமிருந்து ஏதேனும் பொருளாதார நிவாரண அறிவிப்புகள் வரும் எனப் பெரிதும் எதிர்பார்த்தனர்.
எனினும், 'திருடர்களைப் பிடிப்போம்' என்ற பழைய கதைகளையே மீண்டும் கேட்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சி ஒருபோதும் பயப்படாது
முன்பெல்லாம் ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு உற்சாகமாக ஆரவாரம் செய்த மக்கள், தற்போது கைதட்டுவதற்குக் கூட முன்வரவில்லை. அமைப்பாளர்களே கேட்டுக்கொண்ட பின்னரே கைதட்டும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் மக்கள் குடிநீரின்றியும் உணவின்றியும் தவிக்கும் சூழலில், தங்களின் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு வேலை செய்யாமல், இவ்வாறான கூட்டங்களுக்குப் பணத்தை வீணடிப்பதை விடுத்து மக்களுக்குக் குடிதண்ணீர் போத்தல்களையாவது வழங்கியிருக்கலாம்.
அரசின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்க்கட்சி ஒருபோதும் பயப்படாது.
அரசுக்கு உண்மையான மக்கள் பலத்தைக் காட்டுவதற்காக, எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் சிறிய கூடாரங்களுக்குள் அல்லாமல், மைதானங்கள் மற்றும் வீதிகள் அடங்கலாக மக்கள் வெள்ளத்துடன் பிரம்மாண்டமான பேரணியை நடத்தித் காட்டவுள்ளோம்.
அதில் கலந்து கொள்ளுமாறு நாட்டின் முற்போக்குவாத மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி! மெல்பேர்னில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள்...
YOU MAY LIKE THIS VIDEO..