முன்னாள் ஜனாதிபதிகளை இலக்கு வைத்துள்ள அநுர! ரணிலுக்குப் பின் வரிசையில் பலர்
தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிகள் வரிசையில் இருக்கின்றனர் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்கின்றனர். அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் சரியாக மேற்கொள்வோம்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினை பலப்படுத்தியுள்ளோம். கடந்த கால ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மறைந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படும் என்று யாராவது நினைத்தார்களா. இதற்கு முன்னரான நாட்களில் பொலிஸார் தான் பொதுமக்களைத் தேடினார்கள். ஆனால் தற்போது பொதுமக்கள் பொலிஸாரை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, முன்னாள் அமைச்சர்கள் மூவர் சிறைக்குள் இருக்கின்றார்கள். இது நல்ல மாற்றம். பிழை செய்தவர்கள் யாரென்றாலும் அவர்கள் எமது அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு உட்படுவார்கள்.
ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருக்கும் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கின்றார், நான் கூறியதற்கு இணங்கவே அந்த முன்னாள் முதலமைச்சர் அவ்வாறு செயற்பட்டதாக.
அந்த முதலமைச்சர் ஒரு அப்பாவி என்பது போலவும் தான் தான் குற்றவாளி என்பது போலவும் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். இப்போது ரணில் விக்ரமசிங்கவையும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.
17ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு ரணிலை அழைத்தால் அன்று புதுவருடபிறப்பு என்று கூறி அவர் வர மறுத்திருக்கின்றார். ஆனால், இதனை எல்லோரும் அரசியல் பழிவாங்கல் என்று கூறுகின்றனர். குற்றவாளி விசாரணைக்கு அழைக்கப்பட்டால் அது அரசியல் பழிவாங்கலா?
கடந்த அரசாங்கங்களின் போது, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அழைப்பாணை வரும் நிலை ஏற்பட்டிருந்ததா. ஆனால், எங்களில் அந்த நிலை இல்லை. விசாரணைக்கு அழைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகள் வரிசையில் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.