ராஜபக்சர்களை திருடர்கள் என்கின்றனர்! மகிந்த தரப்பின் முக்கியஸ்தர் தகவல்
நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்சர்களை திருடர்கள் என மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஜே.வி.பி.யினர் இந்த நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவை சிரேஷ்ட பிரஜைகள் மறக்கவில்லை என பொதுஜன பெரமனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சாகரவிடம் 10 பில்லியன் கோரிய அனுர..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டம் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை முன்னிலைப்படுத்தி தனது பெயருக்கு கலங்கம் விழைவித்ததாக குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க 10 பில்லியன் ரூபா கோரி கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
எனக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க வழக்கு தாக்கல் செய்யலாம். மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் நீதிமன்றத்தில் பல விடயங்களை நாங்களும் வெளிப்படுத்துவோம்.
நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்சர்களை 'திருடர்கள்' என மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
அனுர குமார திஸாநாயக்க விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்த போது 1000 குளங்களை அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதற்கு திறைசேரி ஊடாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
ஆகவே அந்த நிதிக்கு நேர்ந்தது என்பதை மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
ராஜபக்சர்கள் மீது சேறு பூசி அதனூடாக ஆட்சியை கைப்பற்றுவது மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அரசியல் கொள்கையாக காணப்படுகிறது.
நாட்டு மக்கள் ஒருபோதும் மக்கள் விடுதலை முன்னணியினரிடம் ஆட்சியை ஒப்படைக்கமாட்டார்கள். ஜே.வி.பி.யினர் இந்த நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவை சிரேஷ்ட பிரஜைகள் மறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




