நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்டிஜன் பரிசோதனை - 56 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 56 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கந்தளாய் பிரதேசத்தில் கோவிட் தொற்றுடன் தொடர்புடையவர்கள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
கந்தளாய் பிரதேசத்தில் இதுவரை 50 பேர் வரை தொற்றாளர்களுடன் தொடர்புபட்டதாக கூறி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கந்தளாய், அக்போபுர, வான் எல, வட்டுகச்சி மற்றும் பேராறு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.







