வாழைச்சேனையில் அன்டிஜன் பரிசோதனை - இருவருக்கு கோவிட் தொற்று உறுதி
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுபது பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் இரண்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆடைத் தொழிற்சாலைக்குக் கடமைக்குச் செல்பவர்கள் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
அத்தோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாவிக்குடா நட்சத்திர விடுதியில் கடமையாற்றும் ஐந்து பேருக்கு கோவிட் தொற்று வியாழக்கிழமை மாலை உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கடமையாற்றும் ஆறு பேருக்கும் நேற்று அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் இதில் எவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்று அதிகரித்துக்
காணப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி தொடர்ச்சியாக பி.சி.ஆர்.
பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் என்பன இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



