சம்மாந்துறையில் வீதிகளில் உலாவித்திரிந்தோருக்கு அன்டிஜன் பரிசோதனை
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் வீதிகளில் உலாவித்திரிவோர், நடமாடும் வியாபாரிகள் என 50 பேருக்கு எழுமாறாக இன்று அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் ஆலோசனையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீரின்
வழிகாட்டுதலில், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக் தலைமையில் சுகாதார
பரிசோதகர் குழு,பொலிஸ், இராணுவத்தினர் பங்களிப்புடன் இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இப்பரிசோதனையின் போது சுமார் 50 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் கோவிட் -19 தொற்று ஏற்படவில்லை என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாம் அலையின் தாக்கம் சுமார் இதுவரை 28
பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு நிலைமை தொடருமாயின் எமது
பிரதேசம் முடக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் ,சுகாதார நடைமுறைகளைப் பேணி நடக்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



