கோவிட் தொற்றினால் மரணமடைந்தவரின் வீட்டை சுற்றி அன்டிஜன் பரிசோதனை- 20 பேருக்கு தொற்று உறுதி
திருகோணமலை - உப்புவெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த பெண்ணொருவரின் வீட்டைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை இன்று உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
திருகோணமலையை - அலஸ்தோட்டம் பகுதியில் 70 வயதுடைய பெண்ணொருவர் கோவிட் தொற்றினால் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டைச் சுற்றி உப்புவெளி சுகாதார வைத்திய பிரிவினரால் இன்று காலை 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சையொழிபவன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் தேவையற்ற விதத்தில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் எனவும் தொடர்ச்சியாக முகக்கவசங்களைப் பாவித்து வருமாறும், கைகளை சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.




