இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவிடம் இருந்து பொது அதிகாரிகளுக்கு பறந்த கடிதங்கள்
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை தங்கள் சொத்து அறிக்கையை தாக்கல் செய்யாத பொது அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் முதன்முறையாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
சொத்து அறிக்கை
எனினும், ஒரு அமைச்சரின் தகவலைத் தவிர மற்ற அனைத்தும், ஆணைக்குழுவின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது தகவல்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன், இது சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு அளவுகோலாக உள்ளது. திட்டப்படி கடந்த ஜூலை இறுதிக்குள், இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது.
அந்த வகையில், பொது அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்.
அதே போல் குறிப்பிடத்தக்க சந்தர்ப்பங்களில் ஓய்வு பெற்ற பின்னர், தேர்தலுக்கான வேட்புமனு ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது இது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், அரசாங்க பதவிகள் இல்லாத 169 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 133 பேரினதும், 36 ராஜாங்க அமைச்சர்களில் 25 பேரினதும் பிரகடனங்களை மட்டுமே ஆணைக்குழு நேற்று வரையில் பெற்றுள்ளது.
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, ஜூலை 31 வரை தாமதம் செய்தால், அதிகாரி ஒருவரின் கடைசி மாதச் சம்பளத்தில் 1/30 பங்கும், ஆகஸ்ட் 1 முதல் 31 வரை தாமதமானால், கடந்த ஆறு மாதச் சம்பளத்தில் 1/30ஆம் அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |