வடக்கு - கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
வடக்கு - கிழக்கில் வறட்சி என்றாலும் மழைவெள்ளம் என்றாலும் கடற்தொழிலாளர்களும், விவசாயிகளும் தான் பாதிக்கப்படுகின்றனர், இதற்கு பிரதான காரணம் இங்குள்ள குளங்கள் புனரமைக்கப்படாமையே என ஈ.பி.டி.பி கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே முதலில் வடக்கு - கிழக்கில் உள்ள குளங்களை புனரமைக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (13.09.2026) பாலமீன்மடு விலுள்ள காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பாதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக குளங்கள் புனரமைக்கபடாதனால் வறட்சி என்றாலும் மழைவெள்ளம் என்றாலும் கடற்தொழிலாளர்களும், விவசாயிகளும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இந்த குளங்களை தூர்வாரி அகலப்படுத்தி, ஆழப்படுத்தி சரியான நீர் முகாமைத்துவம் செய்தால் வறட்சி என்றாலும் மழை வெள்ளம் என்றாலும் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள்.

அவ்வாறே கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுடைய சொத்துக்களும் பாதுகாக்கப்படும். எனவே நாட்டு ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள் விடுக்கின்றோம் அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் மட்டும் அபிவிருத்தியை பணிகளை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் இந்த பணத்தை மீதப்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அதன் உறுப்பினர்கள் இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த குளங்களை புனரமைக்க வெகு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் தொடர்ச்சியாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும் என தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி என்று சொன்னால் மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் கட்டடங்களை அமைப்பது விளையாட்டு மைதானங்களை புனரமைப்பது கோயில்களுக்கு நிதி ஒதுக்குவது இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.