தீவிரமடையும் நெருக்கடி: இன்று முதல் இலங்கையில் அதிரடி திட்டம் - பொது மக்களுக்கான அறிவுறுத்தல்
வீட்டு உபயோக மின்சார நுகர்வை 25% குறைக்கும் இலக்குடன் அரசாங்கத்தின் சிறப்புத் திட்டமான 'சுரகிமு லங்கா' இன்று (29.03.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இது ஜனாதிபதி செயலகம், எரிசக்தி அமைச்சு மற்றும் 'தூய்மையான இலங்கை' அமைப்பு ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்படும் ஒரு திட்டமாகும்.
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பதிவாகும் அதிகபட்ச மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிகபட்ச தேவை நேரங்களைத் தவிர்த்து மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய மின்சாரப் பயன்பாட்டு முறைகளை மாற்றுவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் ஒரு முக்கியப் பணியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிரதான நீர்மின் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
சிக்கல்கள்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளதோடு, அவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன.
நுரைச்சோலை மின்நிலையத்தில் நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன.

இவ்வாறான சூழலில் நாடு தழுவிய ரீதியில் பாரிய மின் துண்டிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, குறுகிய கால சுழற்சி முறையிலான மின்வெட்டுக்களே ஒரே தீர்வு என மூத்த பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் இரவு 6 மணி முதல் 10 மணி வரை இந்த மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்கவும் இது அவசியமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்சார கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்படலாமென பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின் வெட்டு தொடர்பிலான எச்சரிக்கைகளும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
எனினும் அரசாங்கம் மின் வெட்டு தொடர்பான எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களையும் வெளியிடாத போதும் பொது மக்கள் முடிந்தளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அரச தரப்பிலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.