மத்திய கிழக்கில் பதற்றம்! வளைகுடா பிராந்தியம் முழுவதும் சிக்கியுள்ள பலர் - வழங்கப்பட்டுள்ள சலுகை
மத்திய கிழக்கில் பதற்ற நிலை தொடர்ந்து வரும் சூழலில் வளைகுடா பிராந்தியம் முழுவதும் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி அரேபியா முக்கியமான விசா சலுகைகளை வழங்கியுள்ளது.
விமான எல்லைகள் மூடப்பட்டதாலும், விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டதாலும் இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கத்தார் மற்றும் குவைத்தைத் தொடர்ந்து, சவூதி அரசாங்கம் அபராதங்களைத் தளர்த்தவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்தை மீறும் விசாக்களை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல்களால் ஏற்பட்ட விமானப் போக்குவரத்துத் தடைகளின் பின்னணியில், வளைகுடா ஒத்துழைப்பு மன்ற நாடுகள் இந்தச் சலுகைகளை வழங்கியுள்ளன.

விசாக்களுக்கு கால அவகாசம்
கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28, 2026க்குள் காலாவதியாக இருந்த அனைத்து வகையான விசாக்களுக்கும் தானாகவே ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குவைத்தில், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமான ரத்துகளைத் தொடர்ந்து, வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.