இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு பாரிய ஆபத்து
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கச்சா எண்ணெய் இன்றுடன் நிறைவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, நாளை முதல் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என சுத்திகரிப்பு நிலையத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் ஏற்றிச் வரும் கப்பல் ஒன்று டிசம்பர் 15ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளது. எனினும், தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில், கடன் கடிதங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக கப்பல் வருகை தாமதமாகும் என தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு சுத்திகரிப்பு நிலையத்தை மூடினால், நிலையத்தின் இயந்திரங்கள் பாதிக்கப்படலாம் என சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால், பழுதுபார்க்க கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் நாட்டிற்கு வராவிட்டால் இன்னும் சில மாதங்களுக்கு கச்சா எண்ணெயை தரையிறக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
