அனோஜன் விடயத்தில் ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் இறையாண்மையையும் சட்டத்தையும் மதிக்கும் அதேவேளை, தமது நாட்டுப் பிரஜை ஒருவரை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
சிவராசா அனோஜன்
அம்பாறை, நார்ப்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தொன்றை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 15ஆம் திகதி சவுதி நீதிமன்றமொன்றினால் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வாய்மொழியாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மரண தண்டனை தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துமூல நீதிமன்றத் தீர்ப்பு இதுவரை இலங்கைத் தூதரகத்துக்கு கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த எழுத்துமூல தீர்ப்பை உடனடியாகப் பெற்றுக்கொள்வது அவசியம் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
தீர்ப்பின் சட்ட அடிப்படையை சரியாக ஆராய்ந்து, சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைய அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிசானா நபீக்கின் சம்பவம்
அனோஜன் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் அந்தப் பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதனை நீக்கி, பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் சவுதி அதிகாரிகளிடம் தண்டனையை தளர்த்துமாறு அல்லது அரச மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க முடியும் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி, உயர்மட்ட அரச மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா, வெளிநாடுகளில் கடுமையான சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு ஆரம்பம் முதலே முறையான சட்ட ஆலோசனையும் இராஜதந்திர பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
சரியான சட்ட ஆலோசனை, நம்பகமான சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் துல்லியமான மொழிபெயர்ப்பு ஆகியவை இல்லாததால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் வேதனையானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தற்போதுள்ள இராஜதந்திர பொறிமுறையின் ஊடாக அனோஜனுக்கு தேவையான அதிகபட்ச தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.