வணங்காமண் செயல் திட்டம்! உலகளாவிய தமிழ் மக்களுக்கு அனைத்துலக தமிழர் செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு (Photos)
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க வணங்காமண் 2.0 என்ற செயல் திட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளமையால் அன்னைத்தமிழ் நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் உதவி பொருட்களைத் திரட்டி பெற்று தமிழ் மக்களிடம் உரிய வகையில் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அனைத்துலக தமிழர் செயலகம் தெரிவித்துள்ளது.
அனைத்துலக தமிழர் செயலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர்களுக்கு எதிரான இனவெறியை ஊட்டினால் போதும் நமக்கு சிங்கள பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பார்கள் என கருதிய சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகள் கடந்த 73ஆண்டுகாலமாக நாட்டை சீரழித்து வருகின்றன.
குறிப்பாக, 2005 -2009 தமிழின அழிப்பிற்குப் பிறகு அந்நாட்டின் உற்பத்தி பெருக்கம், ஏற்றுமதி பெருக்கம், மக்களுக்குரிய அடிப்படை நல்வாழ்வு போன்றவற்றில் அக்கறையின்றி பதவி வெறியில் அரசியல் செய்து ஆட்சி நடத்தி வரும் சிங்கள பேரினவாத அரசியலாளர்கள் இலங்கையை மோசமான நாடாக்கி விட்டன.
பால்மா, அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் எரிபொருள், எரிவாயு என அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டின் மக்கள் அல்லாடி வருகின்றனர். ரொட்டித்துண்டுகளுக்காக நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்துக் கிடப்பதை ஊடகங்களில் பார்த்தபோது உள்ளம் பதைக்கிறது.
இலங்கையில் பெரும்பான்மை வாத சிங்கள மக்களே நலிந்து பரிதவித்து நிற்கும் நிலையில், ஆண்டாண்டு காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் நிலைமையை எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.
வெளிநாடுகளுக்குத் துறைமுகங்களையும், தொழில் மண்டலங்களையும் நீண்ட கால குத்தகைக்கு அளித்துப் பங்கிட்டுக்கொடுத்த போதிலும், அந்நாட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றமில்லை.
கடந்த காலங்களைப் போல ஈழத்தமிழ் மக்களைக் காட்டி தங்களது தவற்றை மறைக்க முடியாமல் திவாலாகி விட்ட இலங்கை அரசானது, இப்போது ஏழை எளிய சிங்கள மக்களின் முன் அம்பலப்பட்டு நிற்கிறது.
உழைக்கும் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் பெரும் இன்னலுக்குள்ளாகி நிற்கும் காலத்தில் இது குறித்து எதொரு கருத்தையும் தமிழர் கூற விரும்பவில்லை. பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்குத் தோள்கொடுத்து நிற்கவேண்டும் என்பதே உலக தமிழர்களின் முதல் எண்ணமாக இருக்கிறது.
ஆழிப்பேரலை பேரிடர் காலத்தில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என இனமொழி வேறுபாடின்றி இரு தேசிய இன மக்களுக்கும் உழைத்திட்ட இம்மாபெரும் விடுதலை இயக்கத்தைப் போற்றும் நமக்கு அதுதான் முதற்பணியும் கூட.
இந்நேரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க வணங்காமண் 2.0 என்ற செயல் திட்டத்தை முன்னெடுக்க அனைத்துலக தமிழர் செயலகம் முடிவெடுத்துள்ளது.
அதற்காக 28/3/2022ஆம் திகதி முதல் 18/04/2022ஆம் திகதி வரை அன்னை திருநாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் உதவி பொருட்களைத் திரட்டி பெற்று தமிழ் மக்களிடம் உரிய வகையில் ஒப்படைக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.
பசிப்பிணியின் பிடியிலிருந்து தமிழ் சிங்கள மக்களைக் காக்க மனித நேயம் கொண்ட அனைவரையும் அறைகூவலிட்டு அழைக்கிறோம்'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

