பல்வேறு பாடசாலைகளில் தகுதியற்ற அதிபர் நியமனங்கள்! கல்வி அமைச்சு அறிவிப்பு
நாடு முழுவதும் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் 159 பாடசாலைகளுக்கான அதிபர்களின் தகுதி தொடர்பில் கேள்வி எழுவதாக உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவியின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் காரணமாக தகுதியான பட்டதாரிகள் அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்க தயங்குவதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, முதலாம் தர அதிபர் பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரும் போது இரண்டாம் தர அதிபர் பதவிகளுக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்டப்படிப்பு திட்டங்கள்
அத்தோடு, நாட்டில் இயங்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் மற்றும் வளாகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய திட்டத்தை வகுக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த நிறுவனங்களின் பட்டப்படிப்பு திட்டங்கள் தொடர்பாக கிடைத்த ஏராளமான முறைபாடுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது 100க்கும் மேற்பட்ட தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகள் மற்றும் வளாகங்களும் அடங்கும். அவை தற்போது முதலீட்டு வாரியத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மதுர செனவிரத்ன விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |