பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இரண்டு அளவு தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் பிரான்சிலிருந்து இங்கிலாந்து திரும்பும் போது 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜூலை 19 முதல், பிற ஆபத்தான பட்டியல் (Amber list) நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்கு வரும் பெரியவர்கள் இனி தனிமைப்படுத்த வேண்டியதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருக்கின்றது. எனினும், தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பீட்டா மாறுபாட்டின் வழக்குகள் தொடர்ந்து இருப்பதால் திட்டமிடப்பட்ட விதிமுறைகளை தளர்த்துவது அங்கு பொருந்தாது என்று பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.
இது குறித்து சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கருத்து வெளியிடுகையில், "கோவிட் -19 பரவுவதைத் தடுக்கவும், வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் மூலம் கிடைத்த இலாபங்களை பாதுகாக்கவும் எல்லைகளில் விரைவான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.
இதில் நாங்கள் எப்போதும் தெளிவாக இருக்கிறோம். "நாடு முழுவதும் திங்களன்று கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், சர்வதேச பயணம் முடிந்தவரை பாதுகாப்பாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,
மேலும் எங்கள் எல்லைகளை மாறுபாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்போம்." இதன்படி, பிரான்சில் இருந்து இங்கிலாந்து வரும் எவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
பசுமை மற்றும் ஆபத்தான நாடுகளில் இருந்து பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து வரும் முழுமையான தடுப்பூசி போட்ட எவருக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.