இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் குறித்து முதல் நாள் அமர்வில் பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அதன் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய தீர்மானம் இலங்கை குறித்து கவனம் செலுத்தும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப அமர்விற்கான அறிக்கையில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக இலங்கை குறித்து பிரித்தானியா ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கும் என்று அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மனித உரிமைகளை மீறுபவர்களை முறையாக கணக்கில் கொண்ட ஒரு திறமையான சர்வதேச மனித உரிமை அமைப்பைக் காண விரும்புகிறோம்.
மனித உரிமைகள் பேரவை அதன் பங்கை முழுமையாகச் செய்யத் தயாராக இருக்க வேண்டும், அல்லது அதன் நற்பெயர் மிகவும் பாதிக்கக்கூடும் என்று தாம் அஞ்சுவதாகவும்” அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவை வெற்றிபெற வேண்டும் என்று பிரித்தானியா விரும்புகிறது, எனவே அது அதன் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான கோர் குழு இலங்கை குறித்து அமர்வில் புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.