குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தத்தின் ஐந்தாண்டு நினைவேந்தல்!
இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாகப் பதிவான கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (23) குறிஞ்சாக்கேணி பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி காலை சுமார் 7.10 மணியளவில், குறிஞ்சாக்கேணி ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பால நிர்மாணப் பணிகள் காரணமாகப் போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் படகு சேவையின்போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது.
இறுதித் தீர்ப்பு
உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவிகள், கர்ப்பிணித் தாய் மற்றும் அவரது மகள் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.
இவ்வனர்த்தம் தொடர்பில் படகு உரிமையாளர் மற்றும் படகைச் செலுத்தியவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

எனினும், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு இதுவரை வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய இழப்பீடுகள் மற்றும் நீதியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
பிரார்த்தனைகள்
இந்நிலையில், கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு, பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட சமயப் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இதேவேளை, குறிஞ்சாக்கேணி மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையவுள்ள பாலத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.