பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் மத்தியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய முக்கிய விடயம்(Video)
இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கும், மலையக மக்களுக்கும் இடம்பெறும் அநியாயம் உலகில் எந்த ஒரு மக்களுக்கும் நடந்ததாக சரித்திர சான்றுகள் இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கு. அண்ணாமலைக்கும் உலகத்தமிழர் சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையில் இடையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
குறிப்பாக இந்த இரு இனங்களுக்கும் துரோகம் நிகழ்ந்துள்ளது. அதேநேரம் இலங்கையில் மிக கடுமையான பிரச்சினைகள் நிகழ்ந்துள்ள இரு பகுதிகளும் இவையே.
ஒரு சதுரங்க ஆட்டத்தில் உலக சக்திகள் விளையாடும் போது அங்கு நகர்த்தப்படும் காய்களாகவே இலங்கை தமிழர் பிரச்சினை காணப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இடம்பெற்ற 2009 இனப்படுகொலைக்கு சரியான தீர்வை பெற்றுத்தர கோரியும், இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினர் படும் இடர்களுக்கான இணக்கப்பாடு, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விவகாரம், மலையக தமிழர்களின் உரிமை பலப்படுத்தல், இலங்கை இந்திய வாழ் அகதிகளின் ஆதரவு என பல்வேறு விடயங்கள் என்பன இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் ஈழத் தமிழர்கள், மலையக தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை இந்தியா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு இடையிலான வலுவான பிணைப்பை எடுத்துக்காட்டி, நமது பகிரப்பட்ட மொழி மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் நிகழ்வாக இது அமையப்பெற்றிருந்ததாக உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு தெரிவித்திருந்தது.
இனப்படுகொலை விவகாரம்
மேலும், இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் கவலைகள் மற்றும் அபிலாஷைகளை நிவர்த்தி
செய்ய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க. அண்ணாமலையுடனும் மற்றும் கட்சியின் தலைமையுடனும் தொடர்ச்சியான உரையாடலை உருவாக்க உலகத் தமிழர் சிவில் சமூகம் வேண்டி நிற்கின்றது என உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அண்ணாமலையின் ஆதரவிற்கு தங்கள் நன்றியைத் தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் அவரது தொடர்ச்சியான ஆதரவை உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |