கடுமையான வெள்ளப்பெருக்கினால் கால்நடைகள் உயிரிழப்பு
மகாவலி அல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால், கால்நடைகள் பெருமளவில் உயிரிழந்துள்ளதாக, கால்நடைப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த பண்ணையாளர்கள், இந்த இயற்கைச் சீற்றத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகள்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, பண்ணையாளர்களுக்குச் சொந்தமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய சில கால்நடைகள் நடக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் மேலும் இந்த எதிர்பாராத இழப்பு காரணமாகப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக் குறியாகியுள்ளது.
கால்நடைப் பண்ணையாளர்கள் மேலும் தெரிவிக்கையில், தங்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் நிரந்தர மேய்ச்சல் தரை ஒதுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
"கால்நடைகளைத் தொடர்ந்து பாதுகாப்பாக வளர்ப்பதற்கும், இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து அவற்றைப் பாதுகாப்பதற்கும் நிரந்தரமான மேய்ச்சல் தரை ஒதுக்கீடு மிகவும் அவசியம்," என அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனப் பண்ணையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிர்கள் வெள்ள நீரில்
அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், கிண்ணியா கல்லடி வெட்டுவான் மஜீத் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தத் திடீர் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கல்லடி வெட்டுவான் மஜீத் நகர்ப் பகுதியில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயிர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு சென்றதால், முழுமையாக அழிந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குரங்குபாஞ்சான், வெல்லாம்குளம், சுங்காங்குளி, பட்டியாநூல், பூ அரசன் தீவு, கண்டல் காடு, சமாஜ தீவு இந்த அனைத்துக் கிராமங்களிலும் விவசாயம் அழிந்ததன் காரணமாக, இப்பகுதி மக்களின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |