சாந்தன் மரணத்திற்கு அங்கஜன் எம்.பி இரங்கல்
சாந்தன் மரணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விரைவில் தனது தாயாரை சந்திப்பார் என நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த சாந்தன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளதாக தமிழக செய்திகள் தெரியப்படுத்தியுள்ளன.
கல்லீரல் பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று காலை 7.50 மணிக்கு காலமானார் என சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை அறிவித்துள்ளது.
நாடு திரும்ப முடியாத நிலை
நீண்ட சிறைவாசம், வலிகள் வேதனைகள் கடந்து விடுதலையாகியும் நாடு திரும்ப முடியாத முடக்கம், அதற்கான போராட்டம் என நீடித்த சாந்தனின் வாழ்வு நோயால் முடிந்து போனது. அவர் இன்றிரவு நாட்டுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நேரத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.
தன் மகனின் வருகைக்காக இறை நம்பிக்கையோடும், மனநம்பிக்கையோடும் காத்திருந்த அவரது தாயாருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. சாந்தனின் தாயார், சகோதரர், சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, சாந்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |