தாயக பகுதியில் அதிகரித்து வரும் இராணுவ கெடுபிடிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கையில் காணப்படும் இனவாத திட்டங்களுக்கு சர்வதேச நன்கொடையாளர்களின் நிதிஉதவி ஆதரவாக இருக்க கூடாதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் தமிழர்களின் மாடுகள், சிங்களவர்களால் கொல்லப்படுவதை நேரில் பார்வையிட சென்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவ அராஜகம்
குறித்த இடத்தில் இருக்கும் மாடுகள் இராணுவத்தினரால் கொல்லப்படுவதுடன் காடுகளும் அழிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இராணுவத்தினர் தங்கள் கடமைகளில் ஈடுபடுவதாக கூறி இதனை நேரில் பார்வையிட சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அதனை மீறி அவர் சம்பவ இடத்தை பார்வையிட தமது குழுவுடன் சென்றுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், நான் இலங்கை பிரஜை ஒருவர். என்னை எந்தவொரு சட்டத்தின் கீழும் நிறுத்த முடியாது. அத்துடன், இராணுவத்தினரால் என்னை ஒருபோதும் நிறுத்த முடியாது. எங்களைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை.
பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழருக்கெதிரான இந்த நடவடிக்கையை நான் பார்வையிடுவதை அவசரகால சட்டமோ அல்லது வேறு எந்த சட்டமோ தடுக்க முடியாது.
இனப்படுகொலை
சர்வதேச நன்கொடையாளர்களின் பணம் மீண்டும் ஒருமுறை இனப்படுகொலை சம்பவங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதனை நிறுத்த நன்கொடையாளர்கள் முயற்சிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டங்களை முன்னெடுப்பதை தவிர்த்து எமக்கு வேறு வழிகள் கிடையாது.
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த எம்மால் முடிந்தவற்றை நாம் செய்வோம் என கண்டித்துள்ளார்.




